நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண்மைத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 28 நபர்களுக்கு ரூ.87,500 மதிப்பீட்டிலும், பொறியியல் துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ.2,26,840 மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.5,30,740 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை விவசாயிகளுக்கு கிடைத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மைத்துறை வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தை சார்ந்த 27,000 மாணவர்கள் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியில் கலந்து கொள்ள உள்ளனர். இப்பணியில் மாணவர்கள் கிராமங்களில் தங்கி கலந்து கொள்வதன் வாயிலாக நேரடியாக விவசாயிகள் பயிர் செய்வதை காண்பதனால் அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைவதுடன் பயிர்களின் நிலையை அறிந்திடும் வகையில் நல்ல பட்டறிவு அனுபவமும் கிடைக்கும். தமிழ்நாட்டில் 55 இலட்சம் சர்வே எண்கள் உள்ளது. அதில் 24,45,00,000 சப் டிவிஷன் நிலங்கள் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1,67,143 சர்வே எண்கள் உள்ளது. அதில் 17,12,765 சப் டிவிஷன் நிலங்கள் உள்ளது. சுமார் 3,38,472 எக்டர் பரப்பில் 26,65,648 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாயித்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது யூரியா 1,60,937 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 40,356 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 1,36,259 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கும், பல்வேறு நிறுவனங்களில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடமை தொடர்பான விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவசாயிகள் தனித்தனியே வழங்கிட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்திட ஏதுவாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் கிராம அளவில் பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் முறை கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு 2024-25 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தகவல்கள், பயிர் சாகுபடி கணக்கீடு மற்றும் புவியியல் வரைபடங்கள் இணைத்தல் ஆகிய பணிகளை மின்னணு முறையில் வேளாண்மை உழவர் நலத்துறை வாயிலாக முழுமையாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இன்றைய தினம் கருங்குழி பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கருங்குழி கிராமத்தில் 351 சர்வே எண்களும், 4,938 உட்பிரிவுகள் உள்ளது. மேலும், அக்கிராமத்தில் 363 எக்டரில் சம்பா நெல், 11 எக்டர் கரும்பு மற்றும் மா, எலுமிச்சை, வெண்டை முதலிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இக்கணக்கீட்டு பணிக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களோடு கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வேளாண்மை கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நெல் குறுவை பருவத்தில் 38,440 எக்டர், சம்பா பருவத்தில் 1,25,749 எக்டர், நவரை பருவத்தில் 11,050 எக்டர், கம்பு 5,420 எக்டர், மக்காச்சோளம் 26,040 எக்டர், வரகு 1,250 எக்டர், உளுந்து 41,250 எக்டர், பச்சைபயிர் 11,750 எக்டர், எல் 3,468 எக்டர், பருத்தி 4,506 எக்டர், கரும்பு 14,850 எக்டர், முந்திரி 29,460 எக்டர், வாழை 5,620 எக்டர், மரவள்ளி 4,515 எக்டர், கொய்யா 1,175 எக்டர், காய்கறிகள் 6,100 எக்டர், தென்னை 1,765 எக்டர், மா 458 எக்டர் மற்றும் பிற பயிர்கள் 3,13,621.75 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 06.11.2024 அன்று தமிழக அளவில் 24 மாவட்டங்களில் 48 கிராமங்களில் 47 வேளாண்மை கல்லூரிகளை சார்ந்த 3,585 மாணவர்கள் மூலம் முன்னோட்ட ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மங்களூர் மற்றும் நல்லூர் வட்டாரப் பகுதிகளில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி மேற்கொள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் திருச்சி மாவட்டம், குமுலூர் வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கடலூர் மாவட்டம், திட்டக்குடி J.S.A வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி நவம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம், நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிர்களுக்கான சிறப்பு திட்டங்கள் என இதுவரை ரூ. 1,170 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை சார்பாக இதுவரை ரூ.422 இலட்சம் மதிப்பிலான விவசாயிகள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .ம.இராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமார், குமுலூர் வேளாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் எஸ்.டி.சிவக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் என்.செல்வம், கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment