கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை, கொள்ளுமேடு, லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வெற்றிலை விவசாயம் செய்து வந்தவர்கள் இப்போதுசுமார் 60ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் வெற்றிலை பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். நம் நாட்டில் ஒவ்வொருவர் வீட்டிலும் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதில் முதலிடம் பெறுவது வெற்றிலையாகத்தான் இருக்கும்.
அந்த அளவுக்கு நம் நாட்டில் வெற்றிலையானது நம் வாழ்வுடன் ஒன்றிப்போன ஒரு பொருள். அப்படி ஒரு வெற்றிலைப் பயிரை விவசாயம் செய்வதென்பது இருப்பதிலேயே மிகக்கடினமான தோட்டக்கலையை சேர்ந்தவிவசாயப் பயிராகும். இந்நிலையில் கடினமாக பாடுபட்டு வளர்த்த வெற்றிலைக்கு தற்போது நிலையான விலை இல்லாமல் போனதால் ஒரு கட்டு வெற்றிலையானது 150 ரூபாயில் இருந்து225ரூபாய் வரையிலான விலைக்கே போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆட்கள் வைத்து வெற்றிலைப் பறிக்கும் கூலிக்குக் கூட இந்த விலை உதவாது, மணிக்கு இவ்வளவு பணம் என்ற வாடகை மோட்டார் பம்ப்செட்டில் தண்ணீர் பாய்ச்சினோம். வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்த பிறகும் அவர்கள் எங்களுக்கு தண்ணீர் திறக்காமல் சென்னைக்கு அனுப்புவதில் தான் ஆர்வம் காட்டினர். பிறகு அவர்களிடம்எங்கள் கஷ்ட நிலையை கூறி கெஞ்சிக் கேட்ட பிறகு வெற்றிலை கொடிக்காலுக்கு தண்ணீரை திறந்து விட்டார்கள். இப்படி பல சிரமங்களை கடந்து தான் இந்த வெற்றிலையை பயிரிட்டு வருகிறோம் என தெரிவிக்கும் விவசாயிகள் 100 ஆண்டுகள கடந்து பாரம்பரியமாக வெற்றிலை விவசாயம் செய்து வந்தாலும் வெற்றிலைக்கான விலை இல்லாமல் போவதால் தங்களது நிலை வேதனையும், சோதனையும் நிறைந்ததாகவே இருக்கிறது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் விளையும் வெற்றிலைக்கு ஈடான ஒரு மருத்துவ குணமும், காரமும், சுவையும் வேறு எந்த ஊரின் வெற்றிலைக்கும் கிடையாது என்பது இப்பகுதி வெற்றிலையின் மகத்துவமாகும். இந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் வேறு ஊரில் விளைந்த வெற்றிலையை இலவசமாகக் கொடுத்தால் கூட போட மாட்டார்கள்!.
அந்த அளவுக்குஇப் பகுதியில் விளையும் வெற்றிலை மகத்துவம் நிறைந்தது என்கின்றனர். தங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு வெளியே விற்கப்படும் வெற்றிலையானது400ல் இருந்து 500 600 என நல்லவிலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், கொடிக்கால் அமைத்து வெற்றிலையை பதியம் போட்டு, சிரமப்பட்டு தண்ணீர் இறைத்து, கூலிக்கு ஆள் வைத்து வெற்றிலையைப் பறித்து, அதை பங்கீடாக தரம் பார்த்து கவுளி கணக்கில் எண்ணி அடுக்கி, அடுத்து வாழை மட்டை தயார் செய்து கட்டி வியாபாரிகளிடம் கொடுப்பதற்குள் படாத பாடு பட வேண்டியுள்ளது.
தங்களுக்கு ஒரு கட்டு வெற்றிலைக்கு சராசரியாக 300 ரூபாய்க்கு மேலே விலை கிடைத்தால்தான் ஓரளவுக்கு லாபம்கிடைக்கும் என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர். வெற்றிலை விவசாயிகளான எங்களுக்கு உழைப்பிற்கும் முதலீட்டிற்கும் தகுந்த சந்தைவிலையை அரசு ஏதோ ஒரு முறையில் நிர்ணயித்துக் கொடுத்தால் மட்டுமே வெற்றிலை விவசாயம் தொடரும். எங்கள் பிள்ளைகள் வெளி மாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இந்த விவசாயத்தை செய்து வருகிறோம். தொடர் நஷ்டம் வரும் இந்த விவசாயத்தை செய்யாதீர்கள் என்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர்.
ஆனாலும் பாரம்பரியமாக செய்த விவசாயத்தை விட்டு வெளியேறுவதற்கு மனதுக்கு கஷ்டமாக உள்ளது என்று விவசாயிகள் தங்கள் மனவேதனையைக் கண்ணீரோடு பதிவு செய்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் தொடர் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் வெற்றிலைப் பயிரிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விடுவார்கள் என்பதே இன்றைய எதார்த்த நிலையாக உள்ளது.
No comments:
Post a Comment