சிதம்பரம், ஜூலை 1:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் ஊஞ்சல் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிள்ளை அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வானவேடிக்கை நடத்துவதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் மீது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்தடுத்து வெடித்த வெடிப்பொருட்களால் தீப்பொறிகள் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது சிதறின.
இந்த விபத்தில் பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 11 வயது சிறுவன் ஒருவருக்கு தீவிர காயம் ஏற்பட்டதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பலத்த காயமடைந்த ஒருவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த வட்டாட்சியர் ஹரிதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, காயமடைந்தவர்களின் சிகிச்சை நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த வெடி விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வெடிப்பொருட்கள் எவ்வாறு தீப்பற்றின, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpeg)
No comments:
Post a Comment