புவனகிரி அருகே செங்கல்மேடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 June 2026

புவனகிரி அருகே செங்கல்மேடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு.

கடலூர், ஜூன் 30:


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள செங்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு தீமிதி திருவிழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பு கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, செங்கல்மேடு கிராம குளக்கரையில் புனித நீராடிய பக்தர்கள், பூங்கரகம் சுமந்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தை அடைந்தனர்.

பின்னர், பக்தி முழக்கங்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்களின் பக்தி பரவசம் அப்பகுதியில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அம்மன் அருள்பெற்ற பூசாரி கத்தி மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த திருவிழாவில் செங்கல்மேடு கிராம மக்களுடன், சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ மாரியம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். போதிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் திருவிழா அமைதியான முறையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/