வடலூர், ஜூன் 30:
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 'ஜெயவிலாஸ்' என்ற தனியார் பேருந்து வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அருகிலிருந்த 7 கடைகள் மற்றும் 8 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வடலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள விருத்தாசலம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, வாகனத்தில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, மெக்கானிக் மூலம் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
பேருந்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த கடைகளுக்கும் பரவியதால், முட்டை கடை, பட்டாணி கடை, மளிகை கடைகள் உள்ளிட்ட 7 கடைகள் தீக்கிரையாகின. மேலும், அருகே நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வடலூர் நான்கு ரோடு பகுதி சிறிது நேரம் இருளில் மூழ்கியது.
தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் வடலூர் பகுதியில் நீண்ட நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் முன்கூட்டியே பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதால் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment