கடலூர், ஜூன் 30:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பட்டதாரி இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நார்த்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த எழிலரசனின் மகள் மதுபாலா (22). இவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கும், புவனகிரி அருகே வத்தராயன்தெத்து கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் ஆனந்த் (26) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த மதுபாலாவை பார்க்க ஆனந்த் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் அங்கு வந்து, ஆனந்திடம் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் மதுபாலாவிடமும் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மனவேதனையடைந்த மதுபாலா, வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுபாலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்று, உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சூர்யா (29), வினித் (22) மற்றும் 17 வயது சிறுவர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா, சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன என்பது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment