கடலூரில் தொடரும் மிரட்டல்கள் நீதிமன்றம், தபால் நிலையத்தை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்.
கடலூர் மாவட்டத்தில் முக்கிய அரசு அலுவலகங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடலூர் நீதிமன்றம் மற்றும் தலைமை தபால் நிலையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல்கள் வந்திருந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிரட்டல் குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் விரைந்து வந்தனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வளாகத்தின் மூலை முடுக்குகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பல மணி நேரத் தீவிர சோதனைக்குப் பிறகு, மிரட்டலில் உண்மை ஏதுமில்லை என்பதும், இது ஒரு வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணைய தள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர்.
P ஜெகதீசன்.

No comments:
Post a Comment