சிதம்பரம் – ஜனவரி 11:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே திருச்சி புறவழிச்சாலையில், சிதம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு சிறுவர்கள் டிராக்டர் டிப்பரின் பின்புறம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த சங்கர் (15) – இராஜாராம் அவர்களின் மகன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் – இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே விபத்தில் கல்விக்கரசன் (18) – பழனிவேல் அவர்களின் மகன், திருச்சி பெரியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் – படுகாயமடைந்தார். முதலில் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தெரியவருவதாவது, காட்டுமன்னார்கோயில் கூட்டுறவு வங்கியில் சேல்ஸ்மேனாக பணியாற்றும் பழனிவேல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது மகளின் வீட்டில் வரிசை வைப்பதற்காக மகன் கல்விக்கரசனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். வரிசை வைத்துவிட்டு திரும்பும் போது, அக்காவின் மகன் சங்கருடன் சிதம்பரம் நோக்கி வந்த நிலையில், இளநாங்கூர் கூத்தன் கோவில் இடையே உள்ள திருச்சி புறவழிச்சாலையில் சென்ற டிராக்டர் டிப்பரின் பின்புறம் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment