சிதம்பரம், டிச. 29:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு, நந்திமங்கலம், குமராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஆள் பிடி முதலைகளின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவர்த்தாம்பட்டு – மெய்யாத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் விவசாயி சௌந்தர்ராஜன் (தந்தை: பெத்து) என்பவர், வடக்கு ராஜன் வாய்க்காலில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது கை, கால் கழுவுவதற்காக வாய்க்காலில் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரில் பதுங்கியிருந்த ஆள் பிடி முதலை திடீரென தாக்கி, அவரது இரு கைகளையும் கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சௌந்தர்ராஜன், கைகளில் பலத்த காயங்களுடன் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது குரலைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜமுத்தையா அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் முதலை தாக்குதல் சம்பவங்கள்
இப்பகுதியில் முதலை தாக்குதல் சம்பவங்கள் புதிதல்ல என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்கள் வருமாறு:
-
தவர்த்தாம்பட்டு – மார்ச் 2025: சாரதி (18) – காயம்
-
மெய்யாத்தூர் – மே 2024: ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் செல்வராஜ் (65) – காயம்
-
தவர்த்தாம்பட்டு – அக்டோபர் 2025: ஜெயச்சந்திரன் (22) – காயம்
-
வேளக்குடி – 2022: திருமலை (18) – உயிரிழப்பு
-
பழையநல்லூர் – செப்டம்பர் 2020: விவசாயி அறிவானந்தம் (56) – உயிரிழப்பு
பழைய கொள்ளிடம் ஆற்றில் 500-க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவை ராஜன் வாய்க்கால், காஞ்சாகி வாய்க்கால் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் மாறிமாறி உலா வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

No comments:
Post a Comment