கடலூர், நவம்பர் 28, 2025 (கார்த்தikai 12):
வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயலின் காரணமாக கடலூர் மாவட்ட கடற்கரைகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. அலைகள் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை எழும்பி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன் வளத்துறையினர் அறிவுறுத்தினர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த சித்திரைபேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, தம்ணாம்பேட்டை, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதியில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து வருகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மீன் வளத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அதிக காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், கடும் கனமழை பெய்ய வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீன்பிடிப்படகுகள் மற்றும் கரையோரத்தில் நிறுத்தப்பட்ட சிறிய படகுகளை பாதுகாப்பான இடங்களில் மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment