பெண்ணாடம் அருகே ரத்த காயங்களுடன் பூட்டிய வீட்டில் கணவன்–மனைவி சடலமாக மீட்பு — கொலையா தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 October 2025

பெண்ணாடம் அருகே ரத்த காயங்களுடன் பூட்டிய வீட்டில் கணவன்–மனைவி சடலமாக மீட்பு — கொலையா தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை.


கடலூர், அக். 25 -

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே குருக்கத்தஞ்சேரி கிராமத்தில், பூட்டிய வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் கணவன்–மனைவி இருவரும் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம் அடுத்த குருக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பவர் விவசாயி. அவரது மனைவி இராமாயி (46). இவர்களுக்கு திருமணமாகி மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், மகன் செல்வமணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

செல்வராஜுக்கும் அவரது மனைவி இராமாயிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் செல்வராஜ் அடிக்கடி மனைவியை அடித்து தாக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் செல்வராஜின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக தாழிட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செல்வராஜ் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். அருகில் அவரது மனைவி இராமாயி ரத்த காயங்களுடன் தரையில் அழுகிய நிலையில் கிடந்தார். இருவரின் உடல்களும் போலீசாரால் மீட்கப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

போலீசார் தொடங்கிய விசாரணையில், செல்வராஜ் கடந்த 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தனது மகனை தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று, பின்னர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்கு திரும்பியதாக தெரிகிறது. அதே இரவு செல்வராஜ் மற்றும் இராமாயி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். அதன் பிறகு இருவரையும் யாரும் காணவில்லை எனவும், நேற்று மாலை துர்நாற்றம் வந்த பிறகு அவர்கள் இறந்தது தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.

இதில் கணவன் மனைவி இருவரும் தகராறில் தற்கொலை செய்துகொண்டனரா, அல்லது செல்வராஜ் மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்–மனைவி இருவரும் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

*/