தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 August 2024

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்.


அதிமுகப் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி K. பழனிசாமி, தமிழகத்தில் ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றுவது பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காத தொழில் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத். 

முன்னாள் அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.சி.  சம்பத் பதிவு செய்த கண்டன அறிக்கையில் மாண்புமிகு அம்மாவின் அரசு 2016 முதல் 2021 வரை ஆட்சி புரிந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் - 86, தலைவர் கலைஞருடன் சேர்த்து - 87, தலைவர் கலைஞர் மறைந்தவுடன் - 86, திருவாரூருக்கு தற்போது இடைத் தேர்தல் நடக்க உள்ளது அதை அப்போது பார்ப்போம். நமது கூட்டணி காங்கிரஸ் – 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1 ஆக 86+9 = எவ்வளவு ? 97 என்றும், இல்லை 87, இல்லை 97 என்று கணக்கில் அசத்தியதையும்; அடுத்து, 2021 பொங்கல் பரிசாக அப்போதைய முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ரூ.2,500/- அறிவித்த போது, மற்றொரு கூட்டத்தில் திரு. ஸ்டாலின் பேசும்போது, நான் கொடுக்கச் சொன்னது 5,000/- இப்போது அதிமுக அரசு கொடுத்திருப்பது ரூ. 2,500/-, ஐந்தாயிரத்தில் ரூ. 2,500 போக மிச்சம் ரூ.1,500 இருக்கு... அதையும் கொடுக்க வேண்டும்... என்று பேசிய கணக்குப் புலியின் அமைச்சரவையில் தொழில்துறை மந்திரியாக இருக்கும் திரு. டி.ஆர்.பி. ராஜா, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் ஜவுளி நிறுவனங்களின் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றது குறித்தும், விடியா திமுக அரசின் 38 மாத கால ஆட்சியில் தொழில் வளர்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உட்பட உரிய ஆதாரத்துடன் எழுப்பிய பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமலும், விடியா திமுக ஆட்சியாளர்களுக்கே உரித்தான முறையில் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போல, சுற்றிச் சுற்றி நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


அண்ணன் எடப்பாடியார் அவர்கள் எழுப்பிய கேள்விகளை மீண்டும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன். 


1. தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்றபோது 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்பட்டுள்ள ஒருசில நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் செயல்படுவது தெரியுமா? தெரியாதா? 


2. 'அம்மாவின் ஆட்சியான 2020-2021ல், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.70 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் சாதனை' என்பது தெரியுமா? தெரியாதா?

3. மத்தியப் பிரதேச முதலமைச்சர் அவர்கள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு வருகை தந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

4. தற்போதைய உங்களது ஆட்சியில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றது தெரியுமா? தெரியாதா?

5. விடியா திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில், நீங்கள் ஈர்த்த தொழில் முதலீடுகள், ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள், அதனால் வேலை வாய்ப்பைப் பெற்ற தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை, மாவட்டம் வாரியாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் என்று தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?


அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி “ஓலா” நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் “ஓலா” நிறுவனம் அமைத்து வருகிறது என்று கடந்த 2021 மார்ச் 9-ந் தேதியே ஓலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.


ஆனால், அதற்குப் பின் விதிவசத்தால் அமைந்த விடியா திமுக அரசின் தொழில் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் இந்த இரு சக்கர வாகன தொழிற்சாலையைக் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயன்றபோது, உடனடியாக அண்ணன் எடப்பாடியார் அவர்களும், நானும், மற்ற அஇஅதிமுக கழக நிர்வாகிகளும் உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தோம்.


தொழில்துறை மந்திரி வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் செமி கண்டக்டர் பற்றி குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளில் கார் போன்ற வாகனங்களுக்குத் தேவைப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியில் சைனா மற்றும் தைவான் போன்ற ஒருசில நாடுகள்தான் முன்னணியில் இருந்தன. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020-ஆம் ஆண்டு ஆரம்பத்தில், சைனாவில் செமி கண்டக்டர் உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்த சமயத்தில், இந்தியாவின் செமி கண்டக்டர் தேவையைப் பூர்த்தி செய்ய அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு ஆர்வம் காட்டியது. நாங்குநேரியிலும், ஒசூரிலும் செமி கண்டக்டர் பூங்காக்கள் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் ஈடுபட்டோம்.


ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த நீங்கள், எங்களது பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியதுபோல் இதற்கும் மூடுவிழா செய்தீர்கள். எனவே, செமி கண்டக்டர் தயாரிப்பிற்கான அந்நிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றபிறகு, மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு 2024-ஆம் ஆண்டு மின்னணுக் கொள்கையை வெளியிட்டேன் என்று மார் தட்டிக்கொள்கிறீர்கள். மேலும், தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நசிவடைவதற்கு காரணம் விடியா திமுக அரசின் தொழிற்கொள்கை மற்றும் கடும் மின்கட்டண உயர்வு, தொழில் வரி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என்று எங்களது கழகப் பொதுச் செயலாளர் தெளிவாகப் பட்டியலிட்டிருந்தார். அதற்கு எந்த பதிலும் இதுவரை இல்லை.


எனவே, காகிதத்தை மையினால் நிரப்புவதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில் வளத்தைப்பெருக்குங்கள் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். தனது கண்டனத்தை முன்னாள் அமைச்சர் தொழில் துறை அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம் சி சம்பத்.

No comments:

Post a Comment

*/