கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 July 2024

கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. இராஜாராம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள சைபர் கிரைம் தடுப்பு எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது  தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இதை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி நபர்கள் சிலர் மாணவ மாணவிகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு, கல்வி கடன் பெறுவதற்கு வங்கிகளில் இருந்து பேசுவதாகவும், கல்வி கடன் உடனடியாக கிடைக்க வேண்டுமானால் பரிசீலனை கட்டணம் செலுத்தினால் விரைவாக கல்வி கடன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதை நம்பி ஏமாறும் சிலர், தங்களுக்கு உடனடியாக கல்வி கடன் வேண்டுமென்ற நினைப்பில் ஒரு தொகையை செலுத்தி விடுகின்றனர். 


ஆனால் அதற்கு பிறகு அந்த மோசடி நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்விக் கடனுக்காக எந்த ஒரு வங்கியும் பரிசீலனை கட்டணம் கேட்பதில்லை. இதே போல பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு தங்கள் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வந்துள்ளது. 


அதை பெற வேண்டுமானால் நாங்கள் ஒரு கியூ ஆர் கோடு (QR Code) அனுப்புவோம் அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். மேலும் ஒரு குறிப்பிட்ட எண்களை சொல்லி அதை பதிவிட சொல்கின்றனர். ஆனால் அது அந்த எண்கள் குறிப்பிட்ட தொகையாக இருக்கிறது. அதை அழுத்தியவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. இதன் பிறகு அந்த எண்களை தொடர்பு கொண்டால் மேற்படி எண் ஸ்விட்ச் ஆப் இருக்கும். மும்பை போலீஸ் என தொடர்புகொள்ளும் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு பயன்படுத்தி தீவிரவாத அமைப்புக்கு பணம் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் மற்றும் உங்கள் ஆதார் முகவரி மூலம் போதை பொருள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அச்சுறுத்தி உங்களை உங்கள் அறையிலேயே வைத்து கைது செய்து இருக்கிறோம். 


நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சட்ட விரோதமாக சம்பாதித்தது, எனவே உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எங்களது Account க்கு அனுப்பி வைத்தால் வழக்கிலிருந்து தப்பித்து கொள்ளாலம் என மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். போலி கடன் ஆப்கள் ( Loan app ) மூலம் ஒரு நபரின் ஆதார் எண், பான் எண்ணை பெற்று அவர்களுக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பி வைக்கின்றனர். 


பின்னர் அந்த பணத்தை திரும்ப அதிகபடியாக செலுத்த கூறி அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிரட்டி வருகின்றனர். தொழிலில் முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றுவது, திருமண இணையதளங்கள் மூலம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று ஏமாற்றுவது, உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக கல்வி உதவி தொகை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் திட்டமே ஒன்று கிடையாது. 


கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக கடலூரில் மட்டும் இதுவரை 13 புகார்கள் வந்துள்ளது. இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த சுற்றறிக்கையை இறை வணக்க கூட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு படித்து காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்க தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.


இது போன்று மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் பணம் ஏமாற்றப்பட்டு 6 மணி நேரத்துக்குள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு தர எளிதாக இருக்கும். பொதுவாக திருட்டு சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றில் பறிபோகும் நகை மற்றும் பணத்தை 70 முதல் 80 சதவீதம் வரை மீட்டு விடலாம். ஆனால் இதுபோன்று சைபர் குற்றங்களில் ஏமாற்றப்படும் பணத்தை மீட்பது காவல்துறைக்கு சவலாக உள்ளது.


பொதுவாக இந்த விஷயத்தில் படித்தவர்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலியான மோசடி நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  S. பிரபாகரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  செந்தில் விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/