கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களோடு வீடுகளில் திருட முயற்சி செய்த ஐந்து பேரை கிராம மக்கள் பிடித்து புவனகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஜெயங்கொண்டம் கடுகூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், குமராட்சி வேட்டவலத்தைச் சேர்ந்த அன்பழகன், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சுரேஷ், திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், மும்முடி சோழகன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என ஐந்து பேர் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
இவர்கள் கீழ்மணக்குடி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தபோது கண்காணிப்பு கேமராவில் சிக்கினர். தாங்கள் கண்காணிப்புக்கேமராவில் பதிவாகி உள்ளோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் திருட வந்ததை விட்டுவிட்டு அதே கிராமத்தில் இரவில் மறைவானப் பகுதியில் பதுங்கி இருந்தனர்.
பின்னர் அதிகாலையில் கிராமத்தின் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வந்த அவர்கள் பேருந்து ஏற முயற்சித்த போது கண்காணிப்பு கேமராவில் பார்த்த உருவம் போல தெரிகிறதே என்று அதிர்ந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் அவர்களை வளைத்துப் பிடித்தனர், பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைதான ஐந்து பேரில் சிலர் புவனகிரிப்பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்ததையடுத்து அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment