கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளவீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டொரு வாரங்களுக்கு முன் காய்ந்து, வறண்டு,கட்டாந்தரையாக, கிரிக்கெட் விளையாடும் மைதானமாக, லாரிகள், இருசக்கர வாகனங்கள் செல்லும் குறுக்கு வழி சாலையாக மாறி காட்சியளித்த வீராணம் தற்போது ஏரி நிரம்பி தண்ணீர் பிரமிப்பான அலைகளுடன் கடல் போல காட்சியளிக்கிறது. ஏரியின் மையப்பகுதியான கந்தகுமாரன் பகுதியில் கடல்போலக் காட்சியளிக்கும் வீராணம் ஏரியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அலைகள் உயர்ந்து எழும்பி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கின்றன.
1 அடி முதல் 2 அடி வரை சத்தத்துடன் அலைகள் ஆர்ப்பரித்து எழும்பி வருவதால் பலரும் அதனைப் பார்த்து ரசித்து செல்கின்றனர். ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.55 அடியாக உள்ளது ஏரிக்கு நீர்வரத்து 1052 கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 57 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்போல மாறி ரம்மியமாக காட்சியளிக்கும் வீராணம் ஏரி தற்போது இப்பகுதியின் வெப்பத்தை குறைத்து, சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு ஏரிக்கரை சாலையில் செல்லும் பயணிகள் வெப்பக் காற்றில் இருந்து விடுதலைப் பெற்றுகுளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகிறார்கள். நீர் நிரம்பிய வீராணம் ஏரியைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment