கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞான சபை மற்றும் தர்மசாலை பெருவெளியில் அமைந்துள்ளது. அவ்வாறு உள்ள பெருவெளியில் வள்ளலார் புகழை உலக அளவிற்கு கொண்டு செல்வதாக கூறி, தமிழக அரசு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுப்பட்டு, கட்டுமான பணியினை தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலங்களை தானமாக வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் வள்ளலார் ஆன்மீக பக்தர்கள், அன்பர்கள் என அனைத்து தரப்பினரும் பெருவெளியை சிதைக்க கூடாது என்று கூறியும், வள்ளலார் சர்வதேச மையம் பெருவெளியில் கட்டக்கூடாது என்று கூறியும் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் நீதிபதிகளான ஆர். மகாதேவன் மற்றும் பி. வி.ஆதிகேசவலு தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வடலூர் வள்ளலார் பெருவெளியில் பழங்காலத்து எச்சங்கள் கண்டறியப்பட்டு நிலையில், தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வடலூர் வள்ளலார் பெருவெளியில் மூன்று பேர் அடங்கிய தொல்லியல் துறை குழுவினர், கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
அவ்வாறு தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தமிழக அரசிடம் ஒரு சில வாரங்களில் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தொல்லியல் துறை குழுவினர், வடலூர் வள்ளலார் பெருவெளியில் ஆய்வு மேற்கொண்டதால், வள்ளலார் பெருவெளியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment