சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் நடத்துவதற்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா வலியுறுத்தி உள்ளார்.
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.என் ராதா அறிக்கை ஒன்றை வெளிவிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் நந்திவர்ம பல்லவ மன்னரால் கி.பி. 726-775-ம் ஆண்டு தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டது.
2-ம் குலோத்துங்க சோழன் கிபி 1133 -ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமான பணிகள் மேற்கொண்டபோது சைவ வைணவ பாகுபாட்டால் தில்லை கோவிந்தராஜ பெருமாள் அப்புறப்படுத்தப்பட்டு கடலில் வீசப்பட்டது, அதன் பின்னர் கிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கி.பி.1564-1572 ம் ஆண்டு தற்போது உள்ள கோவிந்தராஜ பெருமாள் சிலை கோவிலில் நிறுவப்பட்டதாக வரலாறு உள்ளது.
மேலும் இக்கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தி சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவம் நடத்த முயற்சித்த போது கோவிலில் நிர்வாகிகளுக்கும், பொது தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தடுக்கப்பட்டு இதுவரை தில்லை கோவிந்தராஜருக்கு பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. மேலும் வருகிற மே மாதம் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த உகந்த நாட்களாக உள்ளதாக அறங்காவலர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது இந்த கோயில் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் உள்ளது, பிரமோற்சவம் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை மீண்டும் வருகிற ஜூன் 24ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர், இதனால் இந்த மாதம் நடைபெற இருக்கின்ற பிரம்மோற்சவம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
பல 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது, பின்னர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னரால் ஒரே விழாவாக மாற்றி சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
எனவே மதுரையில் சைவ வைணவர்கள் ஒன்றிணைத்து நடத்தப்படுகின்ற சித்திரை திருவிழா போன்று, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்திட வேண்டும். அதற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர் குழு செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்
- தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment