தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 March 2024

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற பாராளுமன்ற பொதுதேர்தல் 2024 தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அச்சகம் உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது, பாராளுமன்ற பொதுதேர்தல் 2024 ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று அறிவித்துள்ளது.மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தனி நபர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள்(வீடு), சுற்று சுவர்களில் அவர்கள் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகைகள் வைத்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல் பரப்புரை வாசகங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இது போன்ற இனங்களுக்கு செலவிடப்படும் தொகை வேட்பாளரின் செலவுத் தொகையில் சேர்த்து கணக்கிடப்படும். தேர்தல் பிரச்சார களமாக, மசூதி, சர்ச், மற்றும் கோயில் போன்ற வழிப்பாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும் சாதியினை ஒரு கருவியாக பயன்படுத்துதல் கூடாது.


பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். தேர்தலுக்காக நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தப்படக்கூடாது. மேலும், போக்குவரத்தை தடை செய்யும் வண்ணம் நடத்தக் கூடாது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி உள்ளூர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டும், காவல் கட்டுப்பாட்டு வசதிகளுக்குட்பட்டும் அனுமதி வழங்கப்படும். கல்வி நிலையங்களை அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது.


பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை CVIGIL APP மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி வாயிலாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-3168 என்ற எண்ணிற்கும், 04142-220277 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, பிரசார கூட்டம், பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது, வாகனம், ஊர்வலம், தற்காலிக கட்சி அலுவலகம், மற்றும் இதர அனுமதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள Suvidha App மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் காவல் துறையினர் உரிய வகையில் போக்குவரத்தை சரிசெய்யவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க ஏதுவாகும்.


தேர்தல் தொடர்பாக சுவரொட்டிகள் முதலியனவற்றை அச்சிட்டு, வெளியிடும் நடைமுறையை கட்டுப்படுத்திட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 127-A-ன் கீழ் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தவொரு தேர்தல் தொடர்பான நோட்டீஸ் அல்லது சுவரொட்டிகளின் முகப்புப் பகுதியில் அதனை அச்சிட்டு வெளியிடுபவரின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் எந்தவொரு நபரும் அச்சிடவோ, வெளியிடவோ அல்லது அச்சிட்டு வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யவோ கூடாது.


தேர்தல் தொடர்பாக யாதொரு நோட்டீஸ் அல்லது சுவரொட்டிகள் அல்லது இத்தகைய ஏனைய ஆவணங்களை அவர்கள் அச்சிடும்போது அச்சிடுபவரின் மற்றும் அதனை வெளியிடுபவரின் பெயர் மற்றும் முகவரியைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும், அச்சிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படுபவரிடமிருந்து பெறப்பட்ட உறுதிமொழி ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்புமாறு அனைத்து அச்சக உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அச்சிடப்பட்ட ஆவண நகல்களின் எண்ணிக்கை, அச்சிடப்பட்ட பணிக்காக விதிக்கப்பட்ட கட்டணம் ஆகிய விவரங்களையும் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.


தேர்தல் சமயத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் இவ்வலுவலகங்கள் தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது, கல்யாண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், போன்றவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான பட்டியலை தேர்தல் அலுவலரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும்.


இக்கூட்டத்தில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் , மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், அ திமுக  சேவல் ஜி ஜெ குமார்,வி சி க  தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோ.மாதவன் இந்திய கம்யூனிஸ்டு குலோப், பா.ம.க போஸ் ராமச்சந்திரன், த வா க அருள் பாபு மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அச்சகம் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/