இந்நிலையில் ஆலையில் கரும்பு எடைபோடும் பகுதியில் எரிந்த கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டரை எடை போட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் ஓட்டுநர்கள், விவசாயிகள் எரிந்த கரும்புகளை வெட்ட அனுமதிகொடுத்து விட்டு ஆலைக்கு ஏற்றி வந்தபிறகு இறக்குவதற்கு அனுமதி தராமல் போனால் இந்த கரும்புகளை நாங்கள் என்ன செய்வது? என்று அதிகாரிகளிடமும் நிர்வாகத்திடமும் தங்களின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதற்கு அங்கிருந்த நிர்வாகத்தினர் தங்களுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆலை நிர்வாகத்தின் வழிக்காட்டலிலே தான் நாங்கள் எரிந்த கரும்புகளை வெட்டி வந்தோம் என்றும், இப்போது மறுத்தால் நாங்கள் இந்தக் கரும்பை எங்கே கொண்டு செல்வது என்றும் கரும்பு விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர். கரும்புகள் நோய்தாக்குதல் ஏற்பட்டும், கரும்பு வயல்களில் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாலும் அதனை நெருப்பு வைத்து எரித்துத்தான் வெட்டவேண்டிய நிலையும் இருப்பதால் கரும்பு வயலுக்கு நெருப்பு வைத்த பிறகே வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது ஆலை நிர்வாகத்திற்கும் தெரியும் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கரும்பு விவசாயிகளின் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நிர்வாகமும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

No comments:
Post a Comment