கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைத்த அமைச்சர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2024

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைத்த அமைச்சர்கள்.


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தேசிய நலவாழ்வு சங்கநிதியின் கீழ் மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மங்களூர் துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் திறந்து வைத்து மேலும் மங்களூர் துணை சுகாதார நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும், மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டிடத்தையும் மற்றும் சிறுப்பாக்கம், அடரி, நாவலூர், புதுக்குளம், கோழியூர், ஒரங்கூர், அரங்கூர், கொடிகளம், சின்னப்பேட்டை மற்றும் ஆண்டிப்பாளையம் ஆகிய 10 இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும், எருமானூர், டி.வி.புத்தூர் மற்றும் வெங்கடாம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் தலா ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் கட்டிடம் என மொத்தம் ரூபாய் 4.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு தாய்சேய் ஊட்டச்சத்து நலப்பெட்டகங்களையும், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு ஜனனி சுரக்ஷா யோஜனா மற்றும் பிறப்பு சான்றிதழ், தாய்சேய் நலப்பெட்டக உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் திட்டக்குடி அரசு மருத்துவமனை, பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ஆய்வு செய்து மருத்துவமனைகளில் மருந்து இறப்பு மற்றும் தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 


மேலும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்ததுடன், அப்பிரிவில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். அமைச்சர் பெருமக்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முதலிடம் வகித்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக விளங்கக்கூடிய கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவசேவை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்குத் நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வீட்டுக்கே சென்று வழங்கப்படுகிறது. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களால் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி தமிழ்நாட்டில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் என்கின்ற வகையில் 4 பணியாளர்களை கொண்ட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் கடலூர் மாநகராட்சியில் 6 நலவாழ்வு மையங்களையும், சிதம்பரம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், பண்ருட்டி நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், விருத்தாசலம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும் என கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் அனுமதிப்பட்ட நிலையில் கடலூர் மாநகராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட 3 நலவாழ்வு மையமும், பண்ருட்டி நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், விருத்தாசலம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும், சிதம்பரம் நகராட்சியில் 1 நலவாழ்வு மையமும் கடந்த 06.06.2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு 25 கிராமப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்க தீர்மானத்ததில் புவனகிரி வட்டம், மஞ்சக்கொள்ளை பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அமையவுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறந்த கட்டமைப்பை பெற்ற நிலையங்களுக்கு 2012 முதல் தேசிய தர உறுதி திட்ட விருதுகள் வழங்கப்பட்டதில் இதுவரை (12 ஆண்டுகள்) தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 614 விருதுகள் பெறப்பட்டுள்ளன. 


அதிலும் குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னரே 545 விருதுகள் கிடைக்கப்பெற்றன. இதில் கடலூர் மாவட்டம் மட்டுமே அதிகபட்சமாக 25 விருதுகள் பெற்றுள்ளன. கடலூர் தலைமை அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை, டிநெடுஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், நெல்லிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விருத்தாசலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கெங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலையம், கடலூர் துறைமுகப் பகுதயில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மதலப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மனம்தவிழ்ந்தபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பட்டாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மங்கலம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், காரைக்காடு சமுதாய ஆரம்ப சுகாதார நிலையம், அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம், குண்டியமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையம், திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தூக்கணாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்அருங்குணம் ஆரம்ப சுகாதார நிலையம், வடலூர் சமுதாய சுகாதார நிலையம் என்ற நிலையங்களும் விருதுகள் பெற்றுள்ளன.


மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,72,625 பயனாளிகள் பயன்பெற்றுள்ளர். தொடர் சேவை என்ற வகையில் 3,71,47,966 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின்கீழ் இதுவரை 2,12,965 பயனாளிகள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோ உள்ளிட்ட சிகிச்சைகள், 14 மாத்திரைகள் உட்பட்டவை தமிழகத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணைஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்க வகைசெய்துள்ளனர். இன்று மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவிலான சராசரி 103 என்ற நிலையில் தமிழ்நாட்டின் சராசரி 52 என சரிபாதியாக உள்ளது. கடலூர் மாவட்டம் 52.8 என்ற அளவில் சராசரி உள்ளதால் மகப்பேறு சேவையில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


பிறப்பின் போது குழந்தை இறப்பு விகிதம் இந்திய அளவிலான சராசரி 28 என்ற நிலையில் தமிழ்நாட்டின் சராசரி 13 என பாதியாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குழந்தை இறப்பு சராசி 7.3 என்ற வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் , இணை இயக்கத்தில் இயக்குநர், மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் மரு.ஹீரியன் ரவிக்குமார், துணை இயக்குநர், சுகாதார பணிகள் மரு.எம்.கீதாராணி  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவமனை சுகாதார துறை அலுவலர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment

*/