கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், மருங்கூர் ஊராட்சி சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வீராணம் நீர்தேக்க தொட்டி அருகில் அமைந்துள்ள செந்தமிழ் நகர் வீட்டு மனைகளின் இரண்டரை ஏக்கர் நிலத்தை அபகரிக்க அரசியல் செல்வாக்கு கொண்ட ரியல் எஸ்டேட் கும்பலின் முயற்சிக்கு கடலூர் மாவட்ட காவல்துறை துணையாக நிற்பது பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது என்றும் கடந்த 18.12.2023 அன்று செந்தமிழ் நகரில் அமைக்கப்பட்டு இருந்த 10க்கும் மேற்பட்ட தகர சீட் கொட்டகைகள், சிமெண்ட் ஸ்லாப், போஸ்ட், நகரின் விளம்பர பலகை மற்றும் நலச் சங்கத்தின் தகவல் பலகைகளை அடித்து நொறுக்கி, திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும்.
இச்சம்பவத்தை திட்டமிட்டு நடத்தி செந்தமிழ் நகரையே சூறையாடிய ஜெய வெங்கட்ராமன் கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த எலிக்குஞ்சு ராஜேந்திரன், அவரது மகன் தன்ராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 18.12.2023 மற்றும் 21.12.2023 தேதிகளில் முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
23.12.2023 முதலமைச்சருக்கும். 3.1.2024 மற்றும் 24.1.2024 டி ஐ ஜி 29.1.2023 மற்றும் 5.1.2024 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்ட எஸ்பி அவர்களுக்கும், 23.1.2024 டிஜிபி ஆகியோருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை இன்று வரை (30.1.2024) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 30.12.2023 சம்பந்தப்பட்ட இடத்தில் ஜோடிக்கப்பட்ட சம்பவத்தை வைத்துக்கொண்டு செந்தமிழ் நகர் வீட்டுமனை உரிமையாளர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எஃப்.ஐ.ஆர்- ல் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் நான்கு பேர் அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
ஒரு மூத்த பெண்மணி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நாளில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது, மிகுந்த வேதனையானது. நிலத்தை அபகரிக்க துடிக்கும் ரியல் எஸ்டேட் கும்பலும், காவல் துறையும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டார்கள் என்பது இந்த எஃப் ஐ ஆர் மூலம் நிரூபணமாகி உள்ளது. செந்தமிழ் நகர் வீட்டுமனை உரிமையாளர்கள் எளியவர்கள் என்பதால் தொடர் மிரட்டலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
பண்ருட்டி ஒன்றியத்தில் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கில் காவல்துறை துணையோடு ஏழை, எளிய மக்களின் நிலங்கள் பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் மூலம் ரியல் எஸ்டேட் கும்பல் அபகரித்து வருவதாக தெரிய வருகிறது. எனவே ஏழை,எளிய மக்களின் நிலங்களை பாதுகாத்திடவும், அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கிடைத்திடவும் உடனடியாக தாங்கள் தலையீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு கேட்டுக் கொள்கிறது என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment