பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பை வழங்கும் அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் பன்னீர் கரும்பு ஒன்று வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் விவசாயிகளிடம் பன்னீர் கரும்புகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் அண்மையில் கடலூரில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் அடங்கிய தனி குழு நியமிக்கப்பட்டு அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியை துவக்கினார், இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமங்களுக்கு சென்ற அதிகாரிகள் தமிழக அரசு நிர்ணயித்த ரூபாய் 33 விலையில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடம் ரூபாய் 17 க்கு கரும்புகளை தாருங்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது, மேலும் ஒரு சில இடங்களுக்கு அதிகாரிகள் நேரில் வராமல் இடைத்தரகர்கள் மூலம் அடிமாட்டு விலைக்கு பன்னீர் கரும்புகளை கேட்பதாகவும் விவசாயிகள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடம் சென்று கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு உள்ள நிலையில் அதிகாரிகள் எங்களை நேரில் சந்திக்காமல் புரோக்கர்கள் மூலம் எங்கள் கரும்புகளை கொள்முதல் செய்ய பேரம் பேசி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு நிர்ணயித்த தொகையில் நேரடியாக அதிகாரிகள் மூலம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டது ஆனால் இந்த ஆண்டு அதிகாரிகள் நேரடியாக எங்களை சந்திக்காமல் புரோக்கர்களை அனுப்பி அடிமாட்டு விலைக்கு கரும்புகளை கேட்பதால் கடனை வாங்கி விவசாயம் செய்து வரும் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எங்களின் கரும்புகள் இன்னும் விளை நிலங்களிலேயே கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது, இதனால் கரும்புகளை டிராக்டர் கொண்டு அழிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்புகளை கொள்முதல் செய்ய வந்த அதிகாரிகள் அடிமாட்டு விலைக்கு எங்கள் கரும்புகளை ப்ரோக்கர்கள் மூலம் கேட்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி கரும்பு கொள்முதல் செய்யப்படுவதற்கு அமைக்கப்பட்ட குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கரும்புகளை நியாயமான அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment