கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்அருகே நங்குடி கிராமத்தில்கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம் ஆகியோர் பங்கேற்று 52 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது நமக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கு என்பதின் முன்னோட்டமே என்று பேசினர். பின்னர் பேசிய கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் பேசும்போது இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு கொடுமையும் வேதனையும் தான் பரிசாக கிடைத்து வருகிறது.
இன்றைய முதல்வரின் சொந்த ஊரிலேயே விவசாயி பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிப்போய்விட்டன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அம்மாகொண்டு வந்த மாணவர்களுக்கு மடிக்கணினி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் போன்ற நல்ல பல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.இப்படி எண்ணற்ற திட்டங்களை எதுவும் இல்லாமல் செய்து இந்த அரசின் ஆட்சியில் நாம் வெளியே சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அதற்கடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் நீங்கள் மறக்காமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து எடப்பாடி யார் முதல்வராக அமரும் போது தான் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் அதிமுகவின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாசும், தலைமை கழக பேச்சாளர் கடியாபட்டி கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு பேருரை ஆற்றினார்கள். மேலும் ஒன்றிய மற்றும் நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.
No comments:
Post a Comment