கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அருண்மொழிதேவன் கிராமத்தில் சினிமா கொட்டகை பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடை பின்புறம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கூலி வேலை செய்து வரும் ராஜேந்திரன் என்பவர் சாதாரண வீடு அமைத்து வாழ்ந்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகிலுள்ள பேருந்து நிழற்குடை இடித்துவிட்டு புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ராஜேந்திரன் குடும்பத்தினரை பொது இடத்தில் இருப்பதாக கூறி வீட்டை பிரித்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று கடந்த 20 நாட்களுக்கு முன்பாக வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
இந்நிலையில் இன்று வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீண்டும் திடீரென வருகை தந்து ராஜேந்திரன் வசிக்கும் வீட்டை வீட்டை காலி செய்ய வேண்டும் எனக் கூறியதோடு மட்டுமல்லாமல் திடீரென நுழைந்த ஒரு அதிகாரி உள்ளே இருந்த கேஸ் ஸ்டவ், சிலிண்டர், சில பாத்திரங்களை தூக்கி வெளியே வீசினார். அப்போது சிலர் வீடியோ எடுப்பதை அறிந்த அவர் சட்டென்று வெளியே வந்தார்.
அத்துமீறிஉள்ளே நுழைந்த இந்த அதிகாரியின் செயல் கண்டு அப்பகுதி மக்கள் முகம் சுளித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் பழைய பேருந்து நிழற்குடையை இடிக்கவும் ஆரம்பித்தனர். வசதி வாய்ப்பில்லாத ஏழைகளிடம் இப்படியா கரடு முரடாக நடந்து கொள்வது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி சுந்தரவல்லி மற்றும் அவரின் இரு பெண்கள் வீட்டின் வெளியே நின்று கதறியது பார்ப்பவர்கள் நெஞ்சை கரைப்பதாகவே இருந்தது.
No comments:
Post a Comment