கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் குமுளி மதகுமூலம் இருநூறு ஏக்கருக்கு மேல் மேட்டுப்பகுதி பாசனம் பெற்று வந்தது. பழமையான பாசன மதகான குமுளி மதகு மூலம் தண்ணீர் பெற்று பாசனம் செய்து வந்தனர். கீழக்கடம்பூர் பகுதியில் குமுளி மதகு பாசனம் பெரும் வயல்கள் அனைத்தும் மேட்டுப்பகுதியில் இருந்து வருவதால் இயல்பான முறையில் இந்த வயல்களுக்கு தண்ணீர் செல்லாது. குமுளி மதகு உடைப்பு ஏற்பட்டதால்சுமார் இருநூறு ஏக்கர் நேரடி நெல் விதைப்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பயிர்கள் காயத் தொடங்கியுள்ளன.
எப்படியாவது பயிர்களை காப்பாற்றி விட முயற்சி செய்த விவசாயிகள் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து கருகும் நெற்பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட குமுளி மதகை தற்காலிகமாக அதிகாரிகள் சரிசெய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் சரி செய்த அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த குமுளி மதகை சரி செய்ய வேண்டும் என்றால் கோடைகாலத்தில் கீழ்பகுதி வாய்க்காலில் தண்ணீர் வற்றிய பிறகுதான் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் முழுமையாக குமுளி மதகு உடைப்பு ஏற்பட்டப் பகுதியை சரி செய்ய முடியும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு டீசல் என்ஜின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வாடகை கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருவதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு குமுளி மதகை நிரந்தரமாக சரி செய்து காய்ந்து கொண்டிருக்கும் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமாய் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment