தற்போது மக்கள் நலத்திட்டங்கள், இயற்கையை மாசுபடுத்தாத வாழ்க்கை முறை, சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு ஆகிய மையக் கருத்துகளில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. கண்காட்சி அரங்கிலேயே கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு குறும்படங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மத்திய மாநில அரசுகளின் அரங்குகளும் இடம் பெறுகின்றன.
இந்த நிதியாண்டில் இதுபோன்ற 76 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூரில் டிஜிட்டல் புகைப்படக் கண்காட்சி நாளை (18.7.2023) முதல் 21.7.2023 வரை நான்கு நாட்கள் டவுன் ஹாலில் நடைபெறுகின்றது. தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் திறந்து வைக்கின்றார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய தகவல் தொடர்பகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை வகிக்கின்றார்.
சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. ஆர்.சுந்தரிராஜா, மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் உட்பட பலர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 18ஆம் தேதி பிற்பகல் மகளிருக்கு அதிகாரமளித்தல் & மகளிர் பாதுகாப்பு சட்டங்கள் என்ற கருத்தரங்கம் நடைபெறுகின்றது. 19ஆம் தேதி முற்பகல், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிற்பகல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கின்றது. 20ஆம் தேதி முற்பகல் காசநோய் இல்லாத கடலூர் என்ற நிகழ்ச்சியும் பிற்பகல் சிறுதானிய உணவுகள் குறித்த உரையும் போட்டியும் நடைபெறுகின்றது.
21ஆம் தேதி முற்பகல் கல்லூரி மாணவர்களுக்கான "அன்னை பூமியைக் காப்போம் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்” என்ற பேச்சுப் போட்டி நடைபெறுகின்றது. பிற்பகல் நிறைவு விழா நடைபெறுகின்றது. அனைத்து அமர்வுகளிலும் பள்ளி & கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தலைமையில் உதவி அலுவலர்கள் திரு எஸ்.வீரமணி (புதுச்சேரி), டி.ஜெயராஜ் (சென்னை) மற்றும் எம்.ஜெய்கணேஷ் (வேலூர்) ஆகியோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment