அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் இன்ப சுற்றுலா செல்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கி பதில் அறிக்கை வெளிட்டார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் தொழில்துறை தரவுகளை ஆராய்ந்து பார்க்காமல் அரைவேக்காட்டுத் தனமாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி பல கோடி முதலீடுகளை பெற்று லட்சக்கணக்கான நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளோம். முதன்முறையாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இந்த சுற்று பயணங்களின் போது எடப்பாடி.கே.பழனிசாமி தனது குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக “யாதும் ஊரே” என்ற திட்டத்தை நியூயார்க்கில் தொடங்கி வைத்தோம். தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க எளிதாக்குதல் சட்டம் கொண்டு வந்து. தொழில் நண்பன், வெற்றி நடை போடும் தமிழகம், வளர்ந்த தமிழகம் என பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது..
அதிமுக ஆட்சி காலத்தில் தான் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாகங்கள் செய்யும் பல தொழில்கொள்கை தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.. மின்சார வாகன கொள்கை, ராணுவ தளவாடங்கள் உதிரி பாகங்கள் கொள்கை ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் பாலிசி கொள்கை மற்றும் ஜவுளிப் பூங்கா கொள்கை கொண்டு வந்தோம்.
இரண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் மாநாட்டில் 44 நிறுவனங்கள் 73, 711 கோடி முதலீட்டில் உற்பத்தி தொடங்கி 1,86,838 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 81 நிறுவனங்கள் 24,492 கோடி முதலீட்டில்உற்பத்தி தொடங்கி 1,10,844 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு சாம்சங், செயின்ட் கோபைன், அப்போலோ டயர்ஸ் விரிவாக்கம்,, எம்ஆர்எப், டிவிஎஸ் மோட்டார்ஸ் விரிவாக்கம், ஆம்வே, கோனோ எலிவேட்டர்ஸ் , மைக்ரோசாப்ட், குரோத் லிங்க் ஓவர்சீஸ் ஆகிய நிறுவனங்கள் தொழில் தொடங்கின. இது இல்லாமல் சியட் டயர் நிறுவனம் 1500 கோடி முதலீட்டில் மதுரமங்கலத்தில் தொழிற்சாலை தொடங்கி 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ஹூண்டாய் விரிவாக்கம், டாட்டா கன்சல்டன்சி,மேண்டோ, ஹானன், டி பி ஐ கம்போசிட்ஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஆகும். போச்சம்பள்ளியில் ஓலா எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை, ஓசூர் ஏத்தர் எனர்ஜி, டாட்டா எலக்ட்ரிகல்ஸ் பத்தாயிரம் கோடியில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, பர்கூரில் லோட்டோ ஷூ கம்பெனி 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது.திண்டிவனம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் துவங்கப்பட உள்ள ஷூ கம்பெனிகள் அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது தான். நோக்கியா மூடப்பட்ட இடத்தில் சால்க்கம் தொழிற்சாலை கொண்டு வந்துள்ளோம். சிட்ரான் பிரான்ஸ் கார் கம்பெனி கொண்டு வந்துள்ளோம்.
முதலமைச்சர் எடப்பாடியார் தனது வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து 41 நிறுவனங்களின் 8835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார். கொரோனா காலகட்டத்தின் போது 72 நிறுவனங்களுடன் 65 ஆயிரத்து 634 கோடியில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. உலக நாடுகளின் பம்பு செட் உற்பத்தியில் 50 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகின்றது. கார் உற்பத்தி மற்றும் கார் உதிரி பானங்கள் உற்பத்தியில் தமிழகம் உலக அளவில் முதல் 10 இடத்திற்குள் உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும் தமிழகம் முன்னேற்றம் உள்ள மாநிலமாக உள்ளது. இதெல்லாம் கழக ஆட்சியின் சாதனைகளாகும். இதெல்லாம் கே.எஸ்.அழகிரிக்கு ஏன் தெரியவில்லையா.
தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் முயற்சி தான். அதன் அடிப்படையில் தான் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் செயல்பட்டார்கள். இன்று அறிக்கை விடும் அழகிரி அவர்களுக்கு 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கேட்பரிஸ் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையும், அல்ஸ்டாம் தொழிற்சாலையும் ஆந்திராவுக்கு போனது தெரியுமா?. வீடியோகான் தொழிற்சாலை தமிழகத்தில் திமுக ஆட்சியில் மூடப்பட்டது இது எல்லாம் அழகிரி அவர்களுக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. பின் 2021 திமுக ஆட்சியில் கார் உற்பத்தியின் மூலப்பொருளான செமி கண்டக்டர் செய்யும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி முதலீட்டில் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றது, 4,000 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை கர்நாடகாவிற்கு சென்றது இதெல்லாம் அழகிரிக்கு தெரியுமா.
சிப்காட்டில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் வடகால் தொழிற்சாலைகளில் இன்றைக்கு என்ன நடக்கிறது என்பது அழகிரிக்கு தெரியுமா. சிட்ரான் பிரான்ஸ் கார் கம்பெனி பிரச்சனையில் பாமக மாநில துணை பொதுச் செயலாளரை குண்டாஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த அரசு எடப்படியார் அரசு. இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கே.எஸ். அழகிரி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
அதிமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி முதலீட்டில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை கொண்டுவர நியூயார்க்கில் முன்மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம். ஆட்சி மாறியது. தற்போது திமுக ஆட்சியில் அந்த தொழிற்சாலை கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவர அழகிரி முயற்சி மேற்கொள்வாரா.
2018 இல் முதலீடுகளை ஈர்ப்பதில் (என்.சி.ஏ.இ.ஆர்)தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. 2019 இல் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் சார்பில் எப்.டி.ஐ அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தது எனநிறைய உதாரணங்களை சொல்லலாம். பத்தாண்டு கால கழக ஆட்சி பற்றி கே.எஸ்.அழகிரி தரவுகளை ஆராய்ந்து அரைவேக்காட்டுத் தனமாக பொதுவாக பேசுவது இனிமேலாவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment