கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம், மனைகள் கையகப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திடீரென என்எல்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்களைக் கொண்டு பிரச்சனைக்குரிய இடத்தில் பல்வேறுப் பணிகளை செய்ததால் கிராம மக்கள் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அப்போது புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை எச்சரிக்கை செய்தார். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை, அவர்களின்வாழ்வாதார பிரச்சனைகளைத் தீர்க்காமல் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாதுஎனக் கூறினார்.
மேலும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இது பற்றி சுமுகமான தீர்வு எட்டப்படும் என தலைமைச் செயலர் தெரிவித்திருந்த நிலையில் ஏன் இந்த ரகசியப் பணிகள் செய்யப்படுகிறது? அது மட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் என்எல்சி தலைவர் தனித்தனியாக என்எல்சி நிலக்கரி எடுக்கும் பணிக்கு போதுமான நிலங்கள் கைவசம் இல்லாமல் இருப்பதால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது எனவும், அதனால் நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க நிலக்கரி எடுப்பதற்கான நிலங்களை எடுத்து தரப்படும் எனவும் தெரிவித்திருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக இல்லாமல் புறக்கணித்து வருவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், என்எல்சி தலைவர் தனித்தனியாக அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு அவர்கள் மக்களின் கோரிக்கைகள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டதாகத்தெரியவில்லை.
முத்தரப்புக் குழுவை ஏற்படுத்தி கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பின்பு பணிகளை செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம் அதற்குக்கூட தயார் இல்லை என்றால் என்ன செய்வது? எனக்கேள்விகளை எழுப்பினார். முடிவில் என்எல்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி மக்களின் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை இல்லாமல் எந்த விதப்பணிகளையும் மேற்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.. இதனையடுத்து என்எல்சியின் கனரக வாகனங்கள் அவசரகதியில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment