கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தின் அருகில் வாலாஜா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து பத்துக்கும்மேற்பட்ட பாசன வாய்க்கால்கள் புவனகிரி பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு பாசனம் தந்து வருகின்றன. இந்நிலையில் கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் கிராமப் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக சுற்றுப்புற கிராம மக்கள், விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்காலில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வாய்க்காலை முறைப்படி தூர்வார வும் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரிடமும் மனு கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரைமேடு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் ஆக்கிரப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை இன்னும் அகற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று பாசன வாய்க்காலை ஆய்வு செய்ய புவனகிரி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் காலை 10 மணி அளவில் வருவதாக விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 20க்குமேற்பட்ட விவசாயிகள் காலையிலேயே வருகை தந்து ஜெயங்கொண்டான் வாய்க்கால் அருகில் காத்திருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை போன் செய்து தாங்கள் காத்திருப்பதாகக்கூறினார்கள்.
ஆனால் வருவாய்த் துறையினர் சொன்னது போல் வரவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த விவசாயிகள் மேற்கொண்டு செய்வதறியாமல்
பாசன வாய்க்கால் கரையில் நின்று கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment