காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. கண்ணிருந்தும் காதலே இல்லாமலும் பழகுவார்கள்.. இதனை நாம் பல சம்பவங்கள் மூலம் பார்த்து வருகிறோம். ஆனால் சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணை இரண்டு கண்களும் பார்வை குறைபாடுகள் உள்ளது என தெரிந்தும் தான் காதலித்த பெண்ணை ஏமாற்றாமல் விரும்பி வந்து திருமணம் செய்துள்ள இளைஞருக்கு பலரும் வாழ்த்துக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைசேர்ந்த கவிதா என்பவர் வீட்டில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிதாவின் அண்ணன் குருமூர்த்தி மகள் புவனேஸ்வரி என்பவர் இருந்து வருகிறார். புவனேஸ்வரிக்கு இரண்டு கண்களிலும் பார்வை குறைபாடு இருந்து வருகிறது. அவரால் இயல்பாக பணிகளை செய்வதில் சிரமம் ஏற்படும். இருந்தாலும் ஓரளவுக்கு தனக்குத் தெரிந்த குறைவான பார்வை திறனில் சமூக வலைதளம் மூலம் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். அது அவருக்கு ஆறுதலாகவும் இருந்து வந்தது.
அப்போது அவருக்கு சேலம் அருகே உள்ள கொங்கு புளியமரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் அரவிந்த் என்பவர் நண்பராக பழக்கமானார். பின்னர் நட்பு ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்து பின்னர் காதலாக மாறியது. புவனேஸ்வரியின் உண்மையான நிலையை தெரிந்து அரவிந்த் நட்பாக பேசி பழகி வந்து பின்னர் தங்களுக்குள் அவர்கள் காதலை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வந்த அரவிந்த் கவிதா வீட்டில் தங்கி இருந்த புவனேஸ்வரியை அழைத்துச் சென்று பட்டுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கவிதா ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தனது அண்ணன் மகள் புவனேஸ்வரியை காணவில்லை என்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். காவல்துறையினர் தங்களை தேடுகிறார்கள் என்பது அறிந்த காதல் ஜோடி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் வருகை தந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர் அந்த காதல் ஜோடிகளை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்புக்கு அரசு ஏதேனும் உதவ வேண்டும். பொருளாதார உதவிக்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment