கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார்.
பேரழிவு சக்தியான என்.எல்.சியை தமிழ்நாட்டின் ஆபத்து இல்லாதது போல சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதேநேரத்தில் என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நிலத்தின் விலை மட்டுமே அல்ல. அதைக் கடந்து கடலூர் மாவட்ட பொதுநலன், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாலை வனமாகும் ஆபத்து என மக்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பாதிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
என்.எல்.சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் கூறியிருக்கிறார் அமைச்சர்.
நிரந்தர வேலைவாய்ப்பு என்று அமைச்சர் குறிப்பிடுவது ஏ.எம்.சி (Annual Maintenance Contract) எனப்படும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தப் பணிகளைத் தான். இது தினக்கூலி பணியை விட மோசமானது. இந்த பணியில் சேருவோருக்கு தினக்கூலி அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும். அதேநேரத்தில் ஒப்பந்த நிறுவனம் நினைத்தால், அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும்.
No comments:
Post a Comment