கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் விவசாயிகளோடு அப்பகுதிக்கு வருகை தந்தார். அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலதிகாரிகளிடம் முறையிடுவதற்காக காத்திருந்தார்.
அப்போது காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்தனர். அவர்களிடம் புவனகிரி எம் எல்ஏ அருண்மொழி தேவன், தமிழக அரசு சட்டமன்றத்தில் கூறியது போல முத்தரப்புக் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகளைத் துவக்குங்கள். இல்லையென்றால் தற்போதைய பணியை நிறுத்துங்கள் என்று கூறினார்.
ஆனால் காவல்துறை அவரது கருத்துக்களை செவிமடுக்காமல் உங்களை கைது செய்கிறோம் ஒத்துழையுங்கள் என்று கூறினர். அதற்கு எம் எல் ஏ அருண்மொழி தேவன் நான் என்ன தவறு செய்தேன். விவசாயிகளிடம் பேசியது ஒரு குற்றமா என்று கேட்டார். ஆனாலும் காவல்துறை அவரை கைது செய்து தன் கடமையை செய்தது.
அப்போது என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு ஆகியவற்றைக் கண்டித்தும் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் மற்றும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து புவனகிரி எம்எல்ஏ மற்றும் ஏராளமான அதிமுகவினர். கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
புவனகிரி எம்எல்ஏ கைதை அறிந்த சிதம்பரம் எம்எல்ஏகேஏ. பாண்டியன், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம், சேத்தியாத்தோப்பு எம் ஆர் கே சர்க்கரை ஆலைத் தலைவர் கானூர் பாலசுந்தரம், சேத்தியாதோப்பு நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் எஸ் கே நன்மாறன், புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர், புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர், கீரப்பாளையம் கிழக்கு மேற்கு ஒன்றியச் செயலாளர்கள், கம்மாபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்ட புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் மாலை 5 மணி அளவில் புவனகிரி எம்எல்ஏ மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவல்துறை விடுதலை செய்வதாக அறிவித்தது. புவனகிரி எம்எல்ஏ வை கைது செய்த விவகாரம் சேத்தியாத்தோப்புப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment