கடலூர் மாவட்டம், கடலூர் வட்டத்திற்கு உட்பட்ட வழிசோதனைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ஆண்டியாதோப்பு பகுதியிலும் மற்றும் ஆண்டியார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடுக்குப்பம் பகுதியிலும் பகுதி நேர நியாய விலை கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (29.12.2022) திறந்து வைத்து, மேலும் அப்பகுதியில் 56 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 95.76 லட்சம் மதிப்பீட்டிலான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் சீரான முறையில் கிடைத்திட ஏதுவாக வழிசோதனை பாளையம் மற்றும் ஆண்டியார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ஆண்டியாதோப்பு மற்றும் நடுக்குப்பம் பகுதிகளில் இரண்டு பகுதி நேர நியாய விலைக் கடைகள் இப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலன் கருதியும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். விவசாயிகள் நலன் கருதி ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கி இந்த அரசு சாதனை படைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்,
மேலும் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சந்தித்து மருந்து பெட்டகத்தினை வழங்கியுள்ளார். புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது அவ்வகையில் கடலூர் மாவட்டத்தில் 4000 உயர்கல்வி பயிலும் மாணவிகள் இதுவரை பயன் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடப்பாண்டில் 68,363 நபர்களுக்கு ரூபாய் 455 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் 77,853 நபர்களுக்கு ரூபாய் 474 கோடி நகை கடன் வழங்கப்பட்டுள்ள 620 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரை 23கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 88,893 விவசாயிகளுக்கு ரூபாய் 655.58 கோடிக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .31.03.2021 அன்று நிலுவையில் இருந்த நகைகடனில் 29,172 பயனாளிகளுக்கு ரூபாய் 114.25 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுயஉதவிக்குழு கடன்களில் 3018 தகுதியான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 52 கோடி அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் நந்தகுமார்ஙமற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.


No comments:
Post a Comment