அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர்: கே.எஸ்.அழகிரி விமரிசனம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர்: கே.எஸ்.அழகிரி விமரிசனம்

அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர்: கே.எஸ்.அழகிரி விமரிசனம்


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர். கொளுத்திப் போடுவார் வெடிக்குமா, வெடிக்காதா எனக் கூட பார்க்கமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.


நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகரமன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். கே.ஐ.மணிரத்தினம், மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன், மாவட்ட மூத்த துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா, முன்னாள் மாவட்டத்தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமலாக்கத்துறைக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.


பின்னர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தது:


நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணைக்கு அழைத்து இருப்பது ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக, தார்மீக ரீதியாக தவறு என்பது எங்கள் கருத்து.


இன்றைக்கு மோடி, அரிசி, தயிர், பால் என அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறார். மக்கள் கஷ்டப்படும்போது அரிசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் நாட்டில் வந்தது. அண்ணாதான் முதல்முறையாக அரிசி விலையைக் குறைத்தார். தற்போது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு மோடி ஜிஎஸ்டி வரி விதிக்கிறார். இதனால் அரிசி விலை அதிகரிக்கும். இது கொடுமையான விஷயம்.


இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி பதவியேற்றுள்ளார். சீதை பதவியேற்றால் வரவேற்று இருக்கலாம். திரெளபதி பதவி ஏற்று இருக்கிறார். தப்பில்லை. சீதையை நாம் வணங்குகிறோம். அவர்கள் திரௌபதியை வணங்குகிறார்கள்.


தவறாக நான் எதுவும் சொல்லவில்லை. ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவரின் நியமனத்தை வரவேற்கிறோம். ஆனால், அவருடைய பதவி ஏற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு உரிய மரியாதை, சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய இருக்கை வழங்கப்படவில்லை.


தமிழகத்தில் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். அவர் திராவிடத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் பேசுகிறார். அது அவருடைய பணி அல்ல. ஆளுநர் மாநிலத்தில் நடைபெறும் விஷயங்களை கவனிக்க வேண்டும். அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் முதலமைச்சர் அழைத்து கருத்து சொல்ல வேண்டும்.


முதலமைச்சரை தவிர்த்து வேறு யாரோடும் அவர் கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடாது. அதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் செல்கிறார். இது தமிழக அரசுக்கு தெரியவில்லை. ஆளுநர் மத்திய அமைச்சரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கிறார். அது உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு ஆளுநர் செயல்படுவது நியாயமா? மோடியால் இதற்கு பதில் சொல்ல முடியுமா? இது தவறான விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை நீங்கள் நசுக்குகிறீர்கள். மாநில முதலமைச்சரைவிட ஆளுநர் உயர்ந்த அதிகாரம் மிக்கவர் என்று கருதுகிறீர்கள். இந்திய ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்தான் அதிகாரம் மிக்கவர். நியமிக்கப்படுகின்ற ஆளுநர் ஒரு பார்வையாளர் என்பதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.


நாடாளுமன்ற அவையில் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள் எனக் கூறி 4 காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 534 பேர் இருக்கின்ற அவையில் 4 பேரால்


எப்படி அவையை நடத்த முடியாமல் போய்விடும். நாடாளுமன்றம் என்பது பேசுவதற்கான இடம்தான். நாடாளுமன்றத்தில் தான் எல்லா கருத்துகளையும் பேச முடியும். சொல்ல முடியும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ் சமூகத்தில் மக்களை தட்டி எழுப்பிய வலிமையான தலைவர் அவர். 3000 கோடி ரூபாய்க்கு சிலையை வைத்தவர்கள்தான் இது தவறு என்று குறை சொல்கிறார்கள். இது பொறாமையில் சொல்லப்படும் கருத்துக்கள்.


ஆளுநர் ரவியை ஆதரித்து தமிழிசை பேசுவதில் வியப்பில்லை. அவரும் ஒரு ஆளுநர். இவரும் ஒரு ஆளுநர். புதிய கல்விக் கொள்கையை பற்றி கல்வியாளர்கள் பேசலாம் அல்லது பாஜக கொள்கை பரப்புச் செயலாளர்கள் பேசலாம். ஆனால், ஆளுநர் அதை ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டு சிறந்த கல்விக் கொள்கை என பேசுவது தவறு. பல மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை.


பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி வெடி மாதிரி. ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிடுவார். அவ்வளவுதான். அது வெடிக்குதா. வெடிக்கவில்லையா என்று கூட பார்க்க மாட்டார். இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். ஒன்றைக் கூட அவர் நிரூபிக்கவில்லை. நிரூபிப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. அதன் பிறகு அதைப் பற்றி அவர் பேசுவதும் இல்லை என்றார் கே.எஸ்.அழகிரி.

No comments:

Post a Comment