கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி,கல்லூரி வாகனங்களை ஒரே நாளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பண்ருட்டி பகுதி அலுவலகம், நெய்வேலி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற ஆய்வுப் பணியை துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர்,கோட்டாட்சியர் அதியமான் கவியரசு,மாவட்ட கல்வி அலுவலர் கௌசர் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரான்சிஸ்,ரவிச்சந்திரன் ,அலுவலக கண்காணிப்பாளர் வடிவேல் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, வாகனங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழ்நாடு பள்ளி வாகன சிறப்பு விதிகள் படி 5 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா, வாகனத்தில் ஜன்னல் கம்பி பொருத்தியிருத்தல், முதலுதவிப்பெட்டி, தீயணைப்புக்கருவி பொருத்தப்பட்டிருப்பதோடு, வாகனங்கள் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு பள்ளி குழந்தைகள் சின்னம் பொருத்தப்பட்டிருக்கிறதா, வாகனத்தின் இடது, வலது மற்றும் பின்புறமாக பள்ளியின் பெயர், தொலைபேசி எண் எழுதப்பட்டிருப்பதோடு, முன்புறம் மற்றும் பின்புறத்தில் பள்ளி வாகனம் என்று எழுதப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
மேலும், வாகனத்தின் தொழில்நுட்ப திறன், ஒட்டுநர் உரிமம், காப்புச் சான்று, தகுதிச் சான்று, அனுமதிச்சீட்டு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் மாவட்டத்திலுள்ள 93 பள்ளிகளின் 297 வாகனங்களும்,15 கல்லூரிகளில் 123 வாகனங்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன


No comments:
Post a Comment