கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், ரெட்டிப்பாளையத்தில் விநாயகர் கோயில் கட்ட அனுமதி கோரி கிராம பொதுமக்கள் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.
ரெட்டிப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோயிலில் கிராம மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு தரப்பினர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோயில் கட்டுமானப் பணியை தொடங்கினர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் சமரசக் கூட்டம் நடத்தினர் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இரு தரப்பினரிடையே பிரச்சினை நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் விநாயகர் கோயில் கட்ட அனுமதி கோரி, மாரியம்மன் கோயிலை பொது கோயிலாக அறிவிக்க வலியுறுத்தியும், தொடர்ந்து பொய் புகார்களை கொடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சுமார் 150 பேர் கையில் கருப்பு பதாகைகளுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சே.சுரேஷ்குமார் குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வசந்தா ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாரியம்மன் கோயிலை பொது கோயிலாக மாற்றுவதற்கும், விநாயகர் கோயில் கட்ட மாவட்டம் நிர்வாகத்திடம் அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment