கல்லூரி முதல்வர் முனைவர் சி. ஜோதி வெங்கடேசுவரன் அறிக்கை
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை- 2022 க்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணைய தள முகவரிகளில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இணையதள வாயிலான விண்ணப்பப் பதிவு இன்று 22.06.2022 முதல் 07.07.2022 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
மேற்காணும் இணையதளங்கள் வாயிலாக மாணாக்கர்கள் தாம் சேர விரும்புகின்ற கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் சேர்க்கை உதவி மையங்களுக்குச் (Admission Felicitation Centre) சென்று The Director, Directorate of Collegiate Education, Chennai - 6 என்ற பெயரில் 22.06.2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.
அவ்வகையில் கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று 22.06.2022 முதல் 07.07.2022 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மையத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, விரைவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் கடலூர், பெரியார் கலைக் கல்லூரி 20 துறைகளுடன் ஏறத்தாழ 5000 மாணாக்கர்கள் பயிலக்கூடியதாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
தகுதிவாய்ந்த மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்ட பெரியார் கலைக் கல்லூரியில் கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் போன்ற படிப்புகளும் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உளவியல், காணெலிக் காட்சித் தகவலியல் போன்ற அறிவியல் படிப்புகளும் கணினி பயன்பாட்டியல், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் போன்ற படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும், இக்கல்லூரியில் பெரும்பாலான துறைகள் ஆராய்ச்சித் துறைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்பில் சேரும் மாணாக்கர், முதுநிலை, இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி வரையில் தொடர்ந்து பயில வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, கல்விவித் தர மேம்பாடு மட்டுமின்றி, மாணாக்கர்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேறுவதற்கும், தகுதிகளை மேம்படுத்திக்கொண்டு சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கணினிப் பயிற்சி, மென்திறன் பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கல்லூரியில் தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித் திட்டம், பசுமை மாணவர் படை, செஞ்சுருள் சங்கம், யோகா ஆகியவை திறம்படச் செயல்படுகின்றன. கிராமப்புற சமூக சேவைப்பணிகளில் ஈடுபட மாணாக்கர்கள் ஊக்கப்படுத்தப்ப்டுகின்றனர். நுண் கலை மன்றம் வாயிலாக மாணாக்கர்கள் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.ஜோதி வெங்கடேசுவரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment