கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் தனித்துணை ஆட்சியர்( நிலஎடுப்பு) சிவக்குமார் தலைமையில் வட்டாட்சியர் மோகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த வருவாய் தீர்வாயம் நல்லூர், நகர்,வண்ணாத்தூர், மேமாத்தூர் சாத்தியம், இலங்கியனூர், வலசை, பிஞ்சனுர், உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் குறைகளை மனுவாக அளித்தனர். இதனிடையே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வாணிய செட்டியார் சமூக மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன் தலைமையில் தனித்துணை ஆட்சியரை நேரில் சந்தித்து தாங்கள் வழிபடும் கோவிலில் ஆக்கிரமிப்பு நிறைந்து உள்ளதாகவும் அதனை அகற்றி கொடுக்கவும் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் அனைவரும் நல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறோம், எங்களுக்கு பாரம்பரியமாகவும் பூர்வீகமாகவும், தலைமுறை தலைமுறையாக இறைநம்பிக்கை கொண்டு நல்லூர் கிராம எல்லையில் சின்ன ஆற்றங்கரை ஓரம்( ஆற்று நீர் செல்லும் பகுதிக்கு இடையூறும் இல்லாமல்) எவரது இடையூறும் இன்றி பன்னெடுங்காலமாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் காட்டேரி எல்லையம்மன் கோவில் கட்டி ஆலயத்தை வழிபட்டு வருகிறோம், இதனிடையே எங்களது குடும்ப நல் விசேஷங்களுக்கும், காதணி விழா, திருமண விழா, வேண்டுதல் விழா ஆகியவற்றை க்கு முப்பூசை செய்து படையல் செய்யும் பழக்கவழக்கத்தை பாரம்பரியமாக பல தலைமுறைகளாக செய்து வருகின்றோம். இந்தக் கோவிலை சுற்றி நாங்கள் இலுப்பை மரம் வேப்ப மரம் மற்றும் பல வகையான மரங்களை வைத்து பராமரித்து வருகிறோம், இதே போன்று நாங்கள் அனைவரும் எங்கள் குல தெய்வமாகிய காட்டேரி அம்மன் கோவிலை பல நபர்களின் உதவியுடன் நிதி திரட்டி எங்களது உடல் உழைப்பைக் கொண்டு ஆலயத்தை நல்ல முறையில் கட்டி வழிபட்டு வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் ஊரைச் சார்ந்த அண்ணாமலை முதலியார் மகன் தங்கவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான நிலம் அருகில் உள்ளதை வைத்துக்கொண்டு அத்துமீறி ஆலயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வரும் இடத்தில் மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால் எங்கள் தரப்பினருடன் வீன் இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எங்கள் சமுதாய மக்களுடன் விரோதப்போக்கை ஏற்படுத்தி அதன் மூலம் ஊரில் கலவரம் செய்து ரத்தக்களரியாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்து வருகிறார். எனவே அய்யா அவர்கள் மேற்படி தங்கவேல் என்பவரை அழைத்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வழிபாட்டு உரிமைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க உரிய உத்தரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட தனித்துணை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

No comments:
Post a Comment