கடலூரில் அமைய விருந்த புதிய பேருந்து நிலையத்தை ரத்து செய்துவிட்டு பாதுகாப்பற்ற இடத்தில் தேர்வு செய்துள்ளதை தொழில்துறை முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் கடும் கண்டனம்
அதிமுக ஆட்சியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கடலூரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டியதை மாற்றி மாவட்ட மக்களுக்கு பயனளிக்காத மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ள ஆளும் திமுகவை கண்டித்தும், கடலூர் மாநகராட்சியை குப்பை கூளமான சுகாதார சீர்கேடு நிறைந்த மாநகராட்சியாக வைத்திருப்பதை கண்டித்தும் சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளில் திருடு நடப்பதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கடலூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சகுப்பத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் ஜி.ஜே.குமார் வரவேற்புரை வழங்கினார். மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் கே.என்.தங்கமணி, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட கழக பொருளாளர் வ.ஜானகிராமன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் தெய்வ.பக்கிரி, கடலூர் மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பி.கே.வெங்கட்ராமன், எம்.பாலகிருஷ்ணன், கெமிக்கல் ஆர்.மாதவன், வ.கந்தன், தங்க.வினோத்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.சி. சம்பத் பேசியதாவது, கழக ஆட்சியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வேளாண்மை துறையிடமிருந்து பெற்று கடலூர் மாநகராட்சிக்கு கொடுத்துள்ளோம். கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திற்கு அருகில் இந்த பேருந்து நிலையம் அமைய இருந்தது கடலூர் மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும். இதன் அருகிலேயே கஸ்டம்ஸ் சாலை, அனைத்து ஊர்களுக்கும் செல்வதற்கான இணைப்புச் சாலை என அனைத்து சாலைகளும் அருகிலேயே இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, வேளாண்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், பல கல்லூரிகள் என அனைத்து வசதிகளும் நிறைந்த இந்த இடத்தைவிட்டு எம்.புதூர் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்ற நினைப்பது கடலூரின் வளர்ச்சியை 25 வருடத்திற்கு பின்னோக்கி தள்ளிவிடும்.
இந்த பேருந்து நிலையம் மாற்றத்திற்கு கடலூரில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் ஆட்டோ வேன் ஓட்டுனர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு என அனைவரும் எதிர்ப்பு காட்டும்போது ஏன் இந்த மாவட்ட நிர்வாகத்திற்கு வீண் பிடிவாதம் என்று தெரியவில்லை. மாவட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். கடலூரில் கஞ்சா குடித்துவிட்டு ஒரு பெண்ணை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு வேறு நடந்துள்ளது. எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில எட்டு மணிக்கு மேல் அங்கு இறக்கி விடப்படும் பெண்களின் நிலைமை என்ன என்று நாம் யோசிக்க வேண்டும்..
பெண்ணை ஆற்றின் கரை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே இருப்பதால் மழைக்காலத்தில் பஸ் நிலையத்திற்கு வெள்ளம் வரும் என்கிறார்கள். ஏன் பெண்ணை ஆற்றின் கரையை உயர்த்தி அதன் கரைகளை பலப்படுத்தினால் வெள்ளம் வருவதை தடுத்து விடலாமே?. கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர் நிறைந்த மாவட்டம். அதனால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் கல்குணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் மழை காலங்களிலும் தண்ணீரில் மூழ்கிவிடும். நமது ஆட்சி காலத்தில் 2015 பெரு மழையின்போது நமது ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கடலூரில் அந்த இடத்தை பார்வையிட்டு அதற்கு ஒரு நிரந்தர தீர்வாக கரைகளை பலமாக உருவாக்க உத்தரவிட்டு அந்த திட்டத்தை நிறைவேற்றினார். கல்குணத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் முழுகாத ஊராக மாற்றித் தந்த பெருமை நமது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு உண்டு என்றும்.அதே போன்று குறிஞ்சிப்பாடியில் அருவா மூக்கு மழைநீர் வடிகால் திட்டத்தை நிறைவேற்றித் தந்த பெருமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு சேரும் என்றும் கூறினார் மேலும் அவர் பேசுகையில் அது போன்று பெண்ணை ஆற்றங்கரையை நன்றாக பலப்படுத்தி புதிய பேருந்து நிலையத்தை அங்கேயே கொண்டு வரவேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு அனைத்து கட்சிக்காரர்களும் எதிர்க்கிறார்கள். நூறு சதவிகித மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு பேருந்து நிலையம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே வர வேண்டும் என்பதுதான். திமுக அரசின் ஓராண்டு சாதனைகளில் மக்களுக்கு வேதனைகளை மிச்சம். கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.. கேஸ் விலை வரலாறு காணாத விலை ஏற்றம் உள்ளது. மக்கள் ஆதிகாலத்தில் விறகு அடுப்பு வைத்திருந்தது போல் விறகை தேட வேண்டிய நிலை தற்போது உண்டாகி உள்ளது.
இங்கே கடலூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கின்ற சக்தி கணேசன் அவர்களுக்கு பெயரில் மட்டும்தான் சக்தி உள்ளது. கடலூர் பெரியகுப்பத்தில் உள்ள என்ஓசிஎல் கம்பெனியை ஹல்டியா பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஏலத்தில் எடுத்து உள்ளது. அந்த கம்பெனியை சமூக விரோதிகள் அடிக்கடி சூறையாடி அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களையும், தளவாடங்களையும் கொள்ளையடித்து செல்கின்றனர். என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை, அதை தடுக்க வேண்டிய காவல்துறை கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. பல சாதனை புரிந்த மாவட்ட கண்காணிப்பாளர்களை பார்த்த இந்த மாவட்டம் இதுபோன்ற ஒரு கண்காணிப்பாளரை இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தீர்வுகாண வேண்டும். தமிழக அரசிற்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றேன். இந்த தொழிற்சாலையில் பொருட்கள் திருடு போவது உலக அளவில் தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழகத்திற்கு ஒரு கரும்புள்ளியாக மாறிவிடும். கழக ஆட்சியில் தொழில் தொடங்க உகந்த மாநிலம் என பெயரெடுத்த தமிழகத்தில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் உலக தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க பயப்படும் நிலையை உருவாக்கி விடும். எனவே இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியப் பட வேண்டும். உடனடியாக காவல்துறை தனது கடமையை செய்யவேண்டும்.
கடந்த கழக ஆட்சியில் நியூயார்க்கில் ஹல்தியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் 50,000 கோடிக்கு போடப்பட்ட முன்மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. மக்களுக்கு பலனளிக்காத இடத்தில் பேருந்து நிலையத்தை மாற்ற பாடுபடும் வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு பலன் அளிக்கும் ஹல்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை கடலூரில் கொண்டுவர பாடுபடவேண்டும் என்று அவரைக் கேட்டுகொள்கின்றேன்..
கடலூர் மாநகராட்சி குப்பை கூளங்கள் நிறைந்த மாநகராட்சியாக காட்சியளிக்கின்றது. குப்பைகளை ஆங்காங்கே போட்டு எரிக்கின்றார்கள் இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய மேயர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். சொத்து வரியை 150% ஏற்றி மக்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றார். தற்போது கூட குப்பைகளை கூட்டுவதற்காக சில்வர் பீச் அருகில் குப்பைகளை கொண்டு சென்றபோது அங்குள்ள மீனவ மக்கள் குப்பை லாரியை சிறைபிடித்த நிகழ்வு நடந்தது என்பது தெரிய வருகிறது. மக்களுக்கு சுகாதார சீர்கேடு இல்லாத ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு குப்பைகளை கொட்ட வழி வகை செய்யவேண்டும்.
எனவே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து நிலையத்தை அமைக்கும் முயற்சிகளை மாவட்ட அமைச்சர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக எம்.புதூரில் தான் பேருந்து நிலையம் அமையும் என்றால் கழகத்தின் சார்பில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் கூட நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் கௌரி பாண்டியன், துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, பண்ருட்டி நகர செயலாளர் தாடி டி.முருகன், அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர்கள் என்.டி.கந்தன், வி.எம்.தமிழ்ச்செல்வன், கே.எம்.நாகபூஷணம், பண்ருட்டி வடக்கு கழக செயலாளர் எம்.சிவா, தொரப்பாடி பேரூராட்சி கழக செயலாளர் டி.கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் ஏ.அர்ஜூனன், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் என்.வரதராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர். ஏழுமலை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரகாசன், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் சங்கீத வசந்தராஜ், ஏ.ஜி.தஷ்ணா, பரணிமுருகன், அலமேலு ராஜி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், கடலூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வ.அழகானந்தம் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment