காவல்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியில் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூடி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தமிழக காவல்துறையில் 25-5-1988 ஆம் ஆண்டு 300 பேர் பயிற்சி காவலர்களாக பணியில் இணைந்தனர். பரங்கிமலையில் பயிற்சி பெற்று பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி முதல் துணை கண்காணிப்பாளர் வரையிலான பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். கால ஓட்டத்தில் பணிச் சூழல், குடும்ப சூழ்நிலை காரணமாக பழைய நண்பர்களை காண்பதே தொடர்பு கொள்வதோ சாத்தியமற்றதாக மாறியது.
ஆனால், இணையதள புரட்சியால் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதும், வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் எளிதானது. இதனால், சக நண்பர்களோடு உரையாடிய மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைத்தது. அதே நேரத்தில், கரோனா காலத்தில் 4 நண்பர்களையும் இழந்தனர். அவர்களுக்கு இக்குழுவினர் தங்களால் இயன்ற பொருளாதார உதவியையும் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது என்று முடிவெடுத்தனர். 300 பேரில் இறப்பு, பணி ஓய்விற்கு பிறகு சுமார் 190 பேர் மட்டுமே பணியாற்றி வருவதும், அதில் பெரும்பாலானவர்கள் கடலூரில் பணியாற்றுவது தெரிய வந்தது. இதனால், கடலூரில் ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். செஞ்சி போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ஏ.அப்பண்டராஜ் தலைமை தாங்கினார். கடலூர் சரக துணை கண்காணிப்பாளர் எஸ்.கரிகால்பாரி சங்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். காவல் ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த 150 பேர் பங்கேற்றனர். இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், பயிற்சி காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பாட்டுப் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். மதிய உணவும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆய்வாளர்கள் சி.ராமச்சந்திரன், ராமையா, சேதுராமன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சபீர்பாட்ஷா, செங்கல்பட்டைச் சேர்ந்த செல்வராஜ், திருவள்ளூரைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
35 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment