விருத்தாசலம் அடுத்த விசலூர் கிராமத்தில் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக இந்த ஏரியில் இருந்து மண் அள்ளப்பட்டு சாலை பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து விரைந்துவந்த மங்கலம்பேட்டை போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது பொதுமக்கள் எங்கள் ஏரியில் உள்ள மண்ணை அள்ளக்கூடாது. எங்கள் ஊர் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுகிறது. மேலும் அனுமதியை மீறி ஏரியை ஆழமாக வெட்டி மண் எடுப்பதால் தண்ணீர் தேங்கும் போது மழைக்காலங்களில் குளிப்பவர்கள் ஆழத்தில் மூழ்கி இறந்து விடுகின்றனர்.
இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். தற்போது சாலை அமைக்கும் பகுதியில் நிறைய ஏரி குளங்கள் உள்ளன. அந்த ஏரி குளங்களில் மண் எடுக்காமல், ஏன் 5 கிலோமீட்டர் தாண்டி உள் கிராமமான எங்கள் ஊர் கிராமத்தில் வந்து ஏன் மண் எடுக்க வேண்டும் என கேட்டனர். அப்போது போலீஸார் மற்றும் துணை வட்டாட்சியர் சாந்தி மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி மாவட்ட கலெக்டரின் அனுமதி உள்ளது. அதனால் மண் எடுக்கப்படுகிறது என கூறினார்கள்.
ஆனால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து சிறைப் பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment