குழந்தை திருமணம் செய்வதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

குழந்தை திருமணம் செய்வதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு திருமணம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தகவல்

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் பின்வருமாறு;-


கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதாவது 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தைக்கு திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணம் ஆகும்.


குழந்தை திருமணம் செய்வதால் படிக்கும் பருவத்தில் கல்வி அறிவு தடைபட்டு தன்னம்பிக்கை குறைவு போன்றவை ஏற்படுகிறது . மேலும் உடல் ரீதியாக கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைக்குறைவான குழந்தை பிறக்கவும், தாய் சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரத்தசோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


எல்லாவற்றிர்கும் மேலாக இதனால் பாலியல் ரீதியான பிரச்சனைகள், கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது.கணவன் மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 ன் படி குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும் . இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளிஆவார். 


அதே போல 21 நிறைவடையாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார் .அதுமட்டும் அல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர் குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அச்சக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளி ஆவார்.


03.05.2022 அன்று நாடுதோறும் கொண்டாட இருகின்ற அக்ஷய திருதியை பண்டிகையை ஒட்டி அங்காங்கே திருமணங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மாவட்ட அளவில் விழிப்புணர்வுடன் இருந்து குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் செயல்பட்டு வரும் தலைவர் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், சுய உதவிக் குழு உறுப்பினர், காவலர், அங்கன்வாடி பணியாளர், சுகாதார ஆய்வாளர், தொண்டு நிறுவன உறுப்பினர், பள்ளி மாணவர் மற்றும் மாணவி அனைவரும் உங்கள் பகுதியில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும்.


தங்களது கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும், மேலும் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098 மற்றும் பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181 தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*/