தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி, அக்கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மங்கலம்பேட்டை பேரூராட்சியின் 14 வது வார்டில், தி.மு.க.,வை நேருக்கு நேர் எதிர்த்து நின்று களம் கண்ட காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,வை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வீ.கண்ணனை தோற்கடித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.வேல்முருகனை மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
ஆனால், 4 ஆம் தேதி நடந்த பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், திமுக வேட்பாளர் மு.சம்சாத்பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை தி.மு.க. மீறியதாகக் கூறியும், அதனைக் கண்டித்தும் அன்று மாலையே காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து 3 இடங்களில் கண்டன முழக்கங்கள் எழுப்பி மங்கலம்பேட்டை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் விருத்தாசலம் - உளுந்தூர் பேட்டை சாலையில், மங்கலம்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளரும், மங்கலம்பேட்டை நகர காங்கிரஸ் தலைவருமான கே.வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்:வீ.சக்திவேல்
No comments:
Post a Comment