குமராட்சி அருகே மளிகை மற்றும் தையல் கடைகளில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 July 2026

குமராட்சி அருகே மளிகை மற்றும் தையல் கடைகளில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.


கடலூர், ஜூலை 6:


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி கீழக்கரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள மளிகைக் கடை மற்றும் தையல் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. குமராட்சி கீழக்கரை மெயின் ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி நடத்தி வந்த மளிகைக் கடையும், ஆறுமுகம் என்பவரின் மகன் எழிலரசன் நடத்தி வந்த தையல் கடையும் அடுத்தடுத்து செயல்பட்டு வந்தன.


இன்று இந்த இரு கடைகளிலும் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்தது. கடைகளில் இருந்த மளிகைப் பொருட்கள், துணிகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, தீ மளமளவென பரவி இரு கடைகளையும் முழுவதுமாக சூழ்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவலின் பேரில், குமராட்சி தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதனால் தீ அருகில் இருந்த மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.


இருப்பினும், இந்த தீ விபத்தில் மளிகைக் கடையில் இருந்த மளிகைப் பொருட்கள் மற்றும் தையல் கடையில் இருந்த தையல் இயந்திரங்கள், விற்பனைக்காகவும் தைப்பதற்காகவும் வைக்கப்பட்டிருந்த துணிகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சேதத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திடீர் தீ விபத்தால் கீழக்கரை மெயின் ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தீ விபத்திற்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/