கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 5001 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பசாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அன்று முதல் தொடர்ந்து சுவாமி அலங்காரம் அபிஷேகம், அங்காளம்மன் வீதியுலா, பெரியாண்டவர்,பெரியநாயகி என்கிற அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாணம் என விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், உலக நன்மையை வேண்டி 5001 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பால்குட ஊர்வலத்திற்கு முன்பாக எம் ஆர் கே சர்க்கரை ஆலை வளாகத்தில் ஒன்று கூடிய பக்தர்கள் மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட பால் குடத்தை சுமந்து, மஞ்சள் பச்சை ஆடையுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மூலவர் கருப்பசாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மகா பாலாபிஷேகம் செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து படி பூஜை, பலி பூஜை, அன்னதானம், மறுபலி என பல்வேறு கோவில் விழா நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment