என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2023

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர்.


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தில் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 


கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 14 வரையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். அப்போது  மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிளாளர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை, என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தொழிற்சங்கத்தினர் இரண்டு வார காலத்திற்குள் கோரிக்கை தொடர்பான மனுவை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு 8 வார காலத்திற்குள் மனுவின் மீது நடவடிக்கை வேண்டும் என கூறியுள்ளது.


 இந்நிலையில் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட 8 வார காலம் கடந்த நவம்பர் 6- ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்டதால், என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில், போராட்டக்குழு தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கடலூரில் சங்கத்தின் சிறப்புச் செயலர் எம்.சேகர் தலைமையில் கடந்த வாரம்  நடைபெற்றது. 


கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினர்.


அதன் தொடர்ச்சியாக  மந்தாரகுப்பத்தில் உள்ள தபால் நிலையத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு 450 ஜீவா ஒப்பந்த சங்கத் தொழிலாளர்கள் அனுப்பி வைத்தனர். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்த கட்டமாக நெய்வேலி என்எல்சி சுரங்க வாயில் முன்பு கூட்டமும், வடலூரில்  மாபெரும் பொதுக்கூட்டமும்  நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

*/