கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(75) இவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். தற்போது கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியசாமியின் மூத்த மகன் சிவகுமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியசாமியின் மருமகளான கோமளவள்ளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி மணிமேகலை போட்டியிட்டுள்ளார். இதில் மணிமேகலை வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இரு தரப்பினர் களுக்கும் தேர்தல் முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் மே மாதம் 12ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த பெரியசாமியை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் உள்ள மணிமேகலை மற்றும் அவரது கணவர் விஷ்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் என கும்பலாக சேர்ந்து பெரியசாமியை கட்டையால் தாக்கி உள்ளனர். பெரியசாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது இளைய மகன் கோபி மற்றும் அவரது மனைவி சங்கீதா மூத்த மருமகள் கோமளவல்லி ஆகியோர் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி இறந்துவிட்டார்.
பெரியசாமியின் மகன் கோபி மற்றும் மருமகள் சங்கீதா இருவரும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்துபோன பெரியசாமியின் உடலை பெண்ணாடம் போலீசார் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இன்று பிரேத பரிசோதனை முடிந்து பெரியசாமியின் உடல் அடக்கம் செய்வதற்கு சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர் இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யாத போலீசாரை கண்டித்து சேலம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கண்டன முழக்கம் எழுப்பினர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் உதவி காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல் ஆய்வாளர் முருகேசன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மேலும் தேர்தல் முன் விரோதம் காரணமாக முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment