தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் இன்று வரை டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.
கடலூரில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை மீனவ கிராமங்களின் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ஆள் உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்தன. அலைகளின் சீற்றத்தால் தடுப்புக்காக கொட்டப்பட்டிருந்த கற்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டன.
நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மாலை முதல் இன்று அதிகாலைவரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் லேசாக தூறிக்கொண்டே இருக்கிறது..
இம்மாதம் தொடக்கம் முதலே கடலூர் மாவட்டம் முழுவதிலுமே அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவும், நண்பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலுமாக சீதோஷ்ணநிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தொடரும் சாரல் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
No comments:
Post a Comment