கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 February 2022

கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு!!



 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் அளித்த பதில்களும்

காந்தி (விவசாயி) :- மலட்டாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் வனத்துறையினர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார்கள். ஆகவே வனத்துறை அனுமதி பெற்று பாலம் அமைக்கவும், சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

கலெக்டர்:- வனத்துறை நிலத்தை உரிய அனுமதி பெற்று வாங்கி, பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்பனைச்செல்வம் (விவசாயி) :- பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
வேல்முருகன் (விவசாயி):- சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவரை ஒரு மூட்டை நெல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை. ஆகவே

இங்கு நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்:- வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, நெல் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஞ்சிதபாதம் (விவசாயி):- பேரூருக்கு தனியாக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட தாமதம் செய்து வருகிறார். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

கலெக்டர்:- விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வராஜ் (விவசாயி) :- ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம்-கீரனூர் இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெங்கநாயகி (விவசாயி) :- ராதாவாய்க்காலில் ஷட்டர் அமைத்து தர வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முருகானந்தம் (விவசாயி):- குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், உளுந்து பயிருக்கு டி.ஏ.பி. உரம் வழங்க வேண்டும். கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 18 கிராமங்கள் டெல்டா பகுதியை விட்டு ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் சேர்க்கப்பட்டது. ஆகவே அந்த பகுதியை டெல்டாவுடன் இணைக்க வேண்டும்.
கலெக்டர் :- விவசாயிகளுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கவும், போதுமான அளவு உரங்கள் இருப்பு வைத்திருக்கவும் வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாதவன் (விவசாயி) :- நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் நெல்கொள்முதல் நிலையத்தில் பணம் தர மறுத்த விவசாயி ஒருவரின் வாகனத்தை மறித்து சாவியை பறித்தவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்து வருகிறது என்றார்.
அப்போது, பல்வேறு விவசாயிகளும் எழுந்து, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பிரச்சினை, முறைகேடு நடந்து வருவதாக குற்றம் சாட்டினர்.
இதை கேட்ட கலெக்டர், எந்த நெல்கொள்முதல் நிலையத்தில் பிரச்சினை உள்ளதோ? அவர்கள் பற்றி புகார் கொடுங்கள் என்றார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்து, அதற்கான பணத்தை உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான மற்றும் வட்ட வாரியாக வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் தாசில்தார்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான தங்கள் குறைகளை இக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும் 2020-21-ம் ஆண்டிற்கான ரபி பருவ உளுந்து மற்றும் நெல் நஞ்சை தரிசு உளுந்திற்கான பயிர் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/