கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகர்மன்றத் தலைவர் பதவி வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக வெற்றி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 11, சுயேச்சைகள் 7, அதிமுக 3, விசிக 2, மதிமுக, காங்கிரஸ், மமக, இந்திய பூனியன் முஸ்லிம் லீக், தவாக, பாமக, தேமுதிக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நெல்லிக்குப்பம் நகர்மன்றத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
இந்தப் பதவி கடந்த சுமார் 20 ஆண்டுகளாக பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொது பிரிவாக மாற்றப்பட்டது. எனவே, தலைவர் பதவியை திமுகவினருக்கே ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி 24 வார்டு உறுப்பினர்கள் சென்னையில் முகாமிட்டு, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியால் நெல்லிக்குப்பம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், வி.சி.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான கிரிஜா திருமாறனை எதிர்த்து, திமுக சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டுமுடிவு அறிவிக்கப்பட்டது.
மொத்தம் பதிவான 29 வாக்குகளில் திமுக-23, விசிக-3 வாக்குகளைப் பெற்றன. 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். இதனால்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் வி.சி.க.வின் கிரிஜா திருமாறன் போட்டியிட, அவரை எதிர்த்து திமுக சார்பில் ஜெயபிரபா போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், வி.சி.க.வினர் நகர்மன்றஅலுவலகம் எதிரே கடலூர் - விழுப்புரம் சாலையில் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்ற ஜெயபிரபா அவர்கள், தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று பதவி விலகினார். அதனையொட்டி அவரும், தலைவராகத் தேர்வான ஜெயந்தி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ .கணேசன் MLA அவர்களைச் சந்தித்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
நெல்லிக்குப்பம் நகரமன்ற துணை தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது
No comments:
Post a Comment